ஐக்கிய அரபு அமீரகம் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில், 2021 ஆம் ஆண்டினை “year of the fiftieth” அதாவது “50 வது ஆண்டு” என்று அழைக்கப்படும் வகையில் இந்த 2021 ஆம் ஆண்டிற்கான கருப்பொருளை (theme) ஐக்கிய அரபு அமீரக தலைவர் மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த 50 வது ஆண்டு நிகழ்வானது அதிகாரப்பூர்வமாக ஏப்ரல் 6, 2021 அன்று தொடங்கி மார்ச் 22, 2022 வரை நீடிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் 2019 டிசம்பரில் இதற்காக ஒரு கோல்டன் ஜூபிலி கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டு ஆண்டு முழுவதும் மேற்கொள்ளவேண்டிய முன்முயர்ச்சிகள், செயல்பாடுகள் மற்றும் பெரும் கொண்டாட்டங்களைத் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பணியானது அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான், மற்றும் துணைத் தலைவர் ஷேக்கா மரியம் பின்த் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று தருணம்…
இது குறித்து ஷேக் கலீஃபா பின் சயீத் அவர்கள் கூறியதாவது: “’50 ஆம் ஆண்டு என்பது 1971 ஆம் ஆண்டில் ஒன்றினைந்த ஐக்கிய அரபு அமீரகம் அறிவிக்கப்பட்ட உடனேயே தொடங்கிய எங்கள் பயணத்தின் வரையறுக்கப்பட்ட வரலாற்று தருணத்தை குறிக்கிறது.”
“இது நமது ஸ்தாபக முன்னோர்கள் தங்கள் தேசத்தை கட்டியெழுப்பும்போது கொண்டிருந்த உறுதியான விருப்பத்தையும் வலுவான உறுதியையும் ஒப்புக்கொள்வதாகும். மேலும் உலகின் மிக வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக இன்று அமீரகத்தை கட்டியெழுப்ப நமது குடிமக்கள் நமது தேசத்திற்காக மேற்கொண்ட நேர்மையான முயற்சிகளை அங்கீகரிப்பதற்காகவும் வருகிறது.”
அதனுடன் “இந்த இளம் தேசத்தை கட்டியெழுப்புவதற்காக அமீரக குடிமக்களுடன் ஒரே பயணத்தை பகிர்ந்து கொண்ட வெளிநாட்டு குடிமக்கள் மேற்கொண்ட முயற்சிகள்” ஆகியவற்றையும் ஷேக் கலீஃபா பின் சயீத் அவர்கள் மதிப்பிட்டுள்ளார். மேலும் 50 ஆண்டுகளுக்கும் மேலான சாதனைகளைப் பற்றி சிந்திக்க இது ஒரு வாய்ப்பாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கொண்டாட்டங்கள்…
இந்த கொண்டாட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மதிப்பிற்குரிய வரலாறு, உன்னத மதிப்புகள் மற்றும் தனித்துவமான சாதனைகள் ஆகியவற்றைக் காண தொடர்ச்சியான முயற்சிகள் உள்ளன.
இந்த முயற்சிகள் “தேசம் அதன் நூற்றாண்டு விழாவை நோக்கிச் செல்வதால் நமது எதிர்காலத்தை வரையறுக்க உதவுகிறது”.
“அவ்வாறு செய்யும்போது, தேசம் தனது இளைஞர்களை நம்பியிருப்பதன் மூலமும், எதிர்காலத்திற்கான அவர்களின் திட்டங்களுடன் முன்னேறத் தேவையான அனைத்து திறன்களையும் அவர்களுக்கு அளிப்பதன் மூலமும் அதன் எதிர்காலத்தை கட்டியெழுப்ப உறுதியுடன் இருக்கும்” என்று ஷேக் கலீஃபா அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறும்போது, “நாம் அனைவரும் வேகமாக மாறிவரும் உலகில் வாழ்கிறோம். இந்த மாற்றத்தின் மத்தியில், புதுமை மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, புதுமையான யோசனைகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் மற்றும் நமது பாரம்பரியத்தையும் மதிப்புகளையும் பாதுகாப்பதற்கான தரமான முயற்சிகள் மற்றும் நமது சமூகத்தின் கலாச்சார பன்முகத்தன்மையைப் பாதுகாக்கவும் இதுபோன்று முயற்சிகள் நம் தேசத்தின் பிரகாசமான எதிர்காலத்துடன் சிறந்த நாளை உருவாக்க பங்களிக்க வேண்டும்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.