ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் ரீம் அல் ஹாஷிமி அவர்கள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு அமீரகப் பயணத்திற்கு முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமாக வேரூன்றிய கலாச்சார, பொருளாதார மற்றும் மக்கள் உறவுகளை எடுத்துரைத்துள்ளார். மேலும், ஒவ்வொரு அமீரகக் குடிமகனுக்கும் ஏதோ ஒரு வகையில் “இந்தியாவுடன் ஏதேனும் ஒரு தொடர்பு” நிச்சயம் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுக் கூறியது குடியிருப்பாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமைச்சர் அல் ஹாஷிமி சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஐக்கிய அரபு அமீரகத்தின் எதிர்கால வளர்ச்சிப் பயணத்தில் இந்தியாவை ஒரு பிரிக்க முடியாத பங்காளியாக விவரித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே செய்யப்படும் பல தசாப்த கால வர்த்தகம், பகிரப்பட்ட பாரம்பரியங்கள் மற்றும் அமீரகத்தில் வசிக்கும் வலுவான இந்திய சமூகம் ஆகியவற்றையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், “நான் எந்த எமிராட்டியிடம் கேட்டாலும், அவர்கள் ஏதோ ஒரு வகையில் இந்தியாவுடன் தொடர்பு கொண்டிருப்பதை நீங்கள் காணலாம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சைக்காகவும் பாரம்பரிய மூலிகை மருத்துவத்திற்காகவும் இந்தியாவிற்குப் பயணம் செய்வதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
மேலும், இரு நாடுகளும் பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் மீது வலுவான மரியாதையைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பல துறைகளில் தொடர்ந்து வலுப்பெற்று வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், மசாலாப் பொருட்கள் மற்றும் ஜவுளிகள் முதல் நவீன தொழில்கள் மற்றும் முதலீடுகள் வரை, வர்த்தகம் நீண்ட காலமாக இரு நாடுகளின் உறவில் ஒரு முக்கியப் பங்கை வகித்து வருகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“வலுவான இந்தியாவும் வலுவான ஐக்கிய அரபு அமீரகமும் இல்லாமல் எதிர்காலம் இருக்க முடியாது,” என்று கூறிய அல் ஹாஷிமி, இருதரப்பு உறவுகள் தொடர்ந்து புதிய மைல்கற்களை எட்டும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் சுமார் 4.5 மில்லியன் இந்தியர்களின் பங்களிப்பையும் பாராட்டியதுடன், அவர்களை இரு நாடுகளையும் இணைக்கும் ஒரு முக்கியப் பாலமாக விவரித்தது அமீரகவாழ் இந்தியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், இருதரப்பு வர்த்தகம் 100 பில்லியன் டாலர்களைத் தாண்ட உதவிய விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தின் (CEPA) வெற்றியை சுட்டிக்காட்டிய அல்ஹஷிமி, தற்போது இரு நாடுகளும் 200 பில்லியன் டாலர் வர்த்தகத்தை அடைய இலக்கு வைத்துள்ளன என்பதையும் வெளிப்படுத்தினார்.
குயப்பாக, AI, சூப்பர் கம்ப்யூட்டிங் மற்றும் குவாண்டம் தொழில்நுட்பம் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் அதிகரித்து வரும் ஒத்துழைப்பையும் அல் ஹாஷிமி எடுத்துரைத்துள்ளார். மேலும் புதுமை சார்ந்த துறைகளில் இரு நாடுகளும் வலுவான லட்சியத்தையும் தொலைநோக்குப் பார்வையையும் பகிர்ந்து கொள்கின்றன என்றும் கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான விரிவடைந்து வரும் மூலோபாய ஒத்துழைப்பிற்கு மற்றொரு உதாரணமாக இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை (IMEC) அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம், இந்திய பிரதமர் மோடியை ஐக்கிய அரபு அமீரகத் தலைமைக்கும் மக்களுக்கும் “ஒரு உண்மையான பொக்கிஷம்” என்று வர்ணித்த அல் ஹாஷிமி, அவரது வருகையை அமீரகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசுகையில், ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யானும் மோடியும் பல ஆண்டுகளாக நெருக்கமான மற்றும் வழக்கமான சந்திப்புகளைப் பேணி, இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாயக் கூட்டாண்மையை வலுப்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை தருவதன் மூலம் தனது ஐந்து நாட்டுப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். இதைத் தொடர்ந்து அவர் நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று அறிக்கைகள் கூறுகின்றன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel