ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்து வரும் நேபாளத்தை சேர்ந்த நபருக்கு ‘The UAE Lottery’-யின் ‘Lucky Day’ டிராவில் 30 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.
இந்த டிராவில் வெற்றி பெற்ற லாட்டரி சீட்டு, அபுதாபியின் ருவைஸ் (Ruwais) தொழிற்பேட்டையில் வசிக்கும் நேபாளத்தைச் சேர்ந்த 26 வயது பாதுகாப்பு ஊழியரான தயாப் கான் (Tayab Khan) வாங்கியுள்ளார். வெற்றிதொகையானது 5 நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இணைந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி, தங்கள் அதிர்ஷ்டம் ஒருநாள் மாறும் என்று நம்பிய அந்த ஐந்து நண்பர்களுக்கும் இந்தப் பரிசுத் தொகை சமமாகப் பகிரப்பட்டு, ஒவ்வொருவருக்கும் 6 மில்லியன் திர்ஹம் கிடைக்கும் என்று கான் கூறியுள்ளார்.
சிறந்த வாய்ப்புகளைத் தேடி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நேபாளத்திலிருந்து அமீரகத்திற்கு வந்த கான், 2024-ன் தொடக்கத்தில், இணையத்தில் ‘The UAE Lottery’-யைப் பற்றி அறிந்த பின்னர் தனது நண்பர்களையும் ஒரு குழுவாக இதில் பங்கேற்க ஊக்குவித்ததாகக் குறிப்பிடுகிறார்.
அவர்கள் பணத்தை ஒன்றிணைத்து, தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கியதுடன், ஒவ்வொரு வாரமும் முறைப்படி எண்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். சில சமயங்களில் குடும்பம் சார்ந்த எண்களையும், வேறு சில சமயங்களில் தற்செயலான எண்களையும் அவர்கள் தேர்ந்தெடுத்ததாக வெற்றியாளர் கூறியுள்ளார்.
மேலும், காலப்போக்கில், அவர்கள் பல சிறிய பரிசுகளை வென்றுள்ளனர். இது ஒரு பெரிய வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்ற அவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியதாகக் கான் குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் தொடர்ந்து பங்கேற்றோம், தொடர்ந்து நம்பினோம். சில சமயங்களில் இது நடக்காது என்று தோன்றிய தருணங்கள் இருந்தன, ஆனால் நாங்கள் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை,” என்று கான் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
மேலும், இந்த டிராவில் வெற்றி பெற்ற எண்கள் அறிவிக்கப்பட்டபோது நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை என்று கூறிய கான், முன்னதாகச் சிறிய பரிசுகளுக்கான மின்னஞ்சல்களைப் பெற்றிருந்ததால், சமீபத்திய மின்னஞ்சல் அறிவிப்பை தான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அந்த மின்னஞ்சலைத் திறந்த போது, அதில் 30 மில்லியன் திர்ஹம் என்று இருந்ததைக் கண்டதும் தன் கை, கால்கள் நடுங்கியதாகவும், ஒரு கனவு போல இருந்ததாகவும் அந்த தருணத்தை அவர் நினைவு கூர்ந்தார்.
ஒவ்வொரு நண்பருக்கும் 6 மில்லியன் திர்ஹம்
இந்த ஜாக்பாட் பரிசுத் தொகை ஐந்து நண்பர்களுக்கும் சமமாகப் பகிரப்படும். இதன் மூலம் ஒவ்வொருவருக்கும் 6 மில்லியன் திர்ஹம் கிடைக்கும் என்பதையும் கான் உறுதிப்படுத்தியுள்ளார்.
கானைப் பொறுத்தவரை, இந்த வெற்றி தன்னைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றப்போகிறது என்பதைப் பார்ப்பதே மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது.
மேலும், திடீரெனக் கிடைத்த இந்த கிராண்ட் பரிசை வைத்து, நேபாளத்தில் தனது குடும்பத்திற்காக ஒரு வீடு கட்டுவதே அவரது முதல் குறிக்கோளாக உள்ளது. கூடுதலாக, தொழில்முனைவோர் வாய்ப்புகளை ஆராயவும், ரியல் எஸ்டேட் துறையில் (குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் சொத்து முதலீடுகள் உட்பட) முதலீடு செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனைக்காகப் பல ஆண்டுகளாகக் காத்திருந்த ஐந்து நண்பர்களுக்கு, இந்த ‘ஜாக்பாட்’ வெற்றி என்பது, அவர்கள் தொடர்ந்து நம்பி வந்த ஒரு கனவு நனவான தருணமாக அமைந்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel