ஒவ்வொரு ஆண்டும் துபாயின் கோடைக்கால வெப்பம் அதிகரிக்கும்போது, ஆயிரக்கணக்கான பிரகாசமான ஆரஞ்சு நிற மலர்கள் நகரின் வீதிகள், பூங்காக்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை அலங்கரிக்கத் தொடங்குகின்றன. இந்த வண்ணமயமான மலர்கள் துபாயின் கோடைக்கால நிலப்பரப்பின் அடையாளமாகத் திகழும் ‘செம்மயில் கொன்றை’ (Flame Tree) எனப்படும் மர வகையைச் சேர்ந்தவையாகும்.
இன்று, 50,000-க்கும் மேற்பட்ட ஃப்ளேம் ட்ரீ மரங்கள் இந்த எமிரேட் முழுவதும் பரவியுள்ளன. இவை சாலை ஓரங்களையும் பொது இடங்களையும் வண்ணமயமான பாதைகளாக மாற்றுவதோடு, ஆண்டின் மிக வெப்பமான மாதங்களில் மிகவும் அவசியமான நிழலையும் வழங்குகின்றன. அத்துடன், இப்போது ஒரு தனித்துவமான கலாச்சார மரபாக உருவெடுத்துள்ளது.
அதாவது துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களின் உத்தரவின் கீழ், வீதிகள், குடியிருப்புப் பகுதிகள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் இந்த மரங்களை நடும் பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், இலவச மரக்கன்றுகளை வழங்குவதன் மூலம் குடியிருப்பாளர்களும் இதில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
ஃப்ளேம் ட்ரீ மரம் துபாயின் தட்பவெப்பநிலைக்கு மிகவும் ஏற்றது. இது 60 ஆண்டுகள் வரை வாழக்கூடியது, 12 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது மற்றும் சுற்றியுள்ள தரைப்பகுதியின் வெப்பநிலையை சுமார் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை குறைக்கும் திறன் கொண்ட பரந்த நிழற்கூரையை (canopy) வழங்கக்கூடியது என்று கூறப்படுகிறது.
இந்த பருவகால மாற்றத்தைக் கொண்டாடும் வகையில், ‘துபாய் டிசைன் லேப்’ (Dubai Design Lab) மூலம் ‘துபாய் ஃபியூச்சர் ஃபவுண்டேஷன்’ (Dubai Future Foundation) வருடாந்திர ‘ஃப்ளேம் ட்ரீ சீசன்’ (Flame Tree Season) முயற்சியைத் தொடங்கியது. மே 1 முதல் ஜூலை 31 வரை நடைபெறும் இத்திட்டம், இம்மரத்தின் இயற்கையான பூக்கும் காலத்துடன் ஒத்துப்போகிறது.
“ஃப்ளேம் ட்ரீ சீசன் என்பது ஒரு நகரளாவிய கலாச்சார முயற்சியாகவே உருவாக்கப்பட்டது,” என்று இத்திட்டத்தின் திட்டத் தலைவர் ரஃபியா பின் சுலைமான் கூறியுள்ளார்.
இம்மரங்கள் நீண்ட காலமாகவே துபாயின் நகர்ப்புற நிலப்பரப்பின் ஒரு பகுதியாக இருந்து வந்தாலும், இந்த முயற்சி குடியிருப்பாளர்களைச் சற்று நின்று, இந்த பருவகால மலர்ச்சியை ரசிக்கவும், அதைச் சுற்றிப் பகிரப்பட்ட நினைவுகளை உருவாக்கவும் ஊக்குவிக்கிறது என்று ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
துபாயின் தன்மையை பிரதிபலிக்கும் ஒரு இயற்கையான அடையாளத்தைத் தேடிய ஆராய்ச்சியாளர்களால் இந்த கருத்துரு உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் உறுதித்தன்மை, கடும் வெப்பத்திலும் செழித்து வளரும் திறன் ஆகியவற்றின் காரணமாக ஃப்ளேம் ட்ரீ மரம் நகரின் சாலைகளை அழகுப்படுத்த மிகச்சிறந்த தேர்வாக அமைந்தது என்றும் ரஃபியா குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் விவரிக்கையில், “இது துபாயின் பல முக்கிய பண்புகளைப் பிரதிபலிக்கிறது, இம்மரம் சவாலான சூழலிலும் உயிர்வாழ்கிறது, நிழலை வழங்குகிறது மற்றும் மிகவும் வசதியான நகர்ப்புற சூழலுக்குப் பங்களிக்கிறது.” என்று மரத்துடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, சமூகப் பங்கேற்பு இந்த முயற்சியின் முக்கிய பகுதியாக மாறியுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். குடியிருப்பாளர்கள் மரக்கன்றுகளைக் கேட்டு வாங்குதல், நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுதல் மற்றும் தங்கள் அனுபவங்களை இணையத்தில் பகிர்ந்துகொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் இத்திட்டத்தை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதற்கு கிடைத்த வரவேற்பு எதிர்பார்ப்புகளை மிஞ்சியுள்ளது என்றும், பல குடியிருப்பாளர்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் ஏற்கனவே வளர்ந்து வரும் மரங்களைப் பற்றி அதிக விழிப்புணர்வு பெற்று, தங்கள் வீடுகளிலும் தோட்டங்களிலும் புதிய மரங்களை நடவு செய்யத் தொடங்கியுள்ளனர் என்றும் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
முதல் பூக்கள் வழக்கமாக ஏப்ரல் மாத இறுதியில் தோன்றும், மே மாதம் முழுவதும் பூக்கள் முழுமையாகப் பூத்து, கோடை காலம் வரை தொடரும் என்று கூறப்படுகிறது.
இந்த முயற்சி வணிக நிறுவனங்கள், கலைஞர்கள் மற்றும் சமூகக் குழுக்களின் ஆர்வத்தையும் ஈர்த்துள்ளது. ஆரம்பத்தில் 40-க்கும் மேற்பட்ட பிராண்டுகள் ஒத்துழைப்பு குறித்த கலந்துரையாடல்களில் இணைந்தன. இது மரத்தால் ஈர்க்கப்பட்ட படைப்புத்திறன் மிக்க நிறுவல்கள், பொது நிகழ்வுகள் மற்றும் சமூகம் சார்ந்த செயல்பாடுகளுக்கு வழிவகுத்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
எதிர்காலத்தில், இந்த மரத்தின் பருவம் என்பது வருங்கால சந்ததியினர் அனுபவித்து, வடிவமைக்கக்கூடிய ஒரு நீடித்த கலாச்சாரப் பாரம்பரியமாக மாறும் என்று துபாய் நம்புகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel