ADVERTISEMENT

வேகமான பாதையில் மற்ற வாகனங்களுக்கு வழி விட தவறுவது சட்ட விரோதமானது..!! அபராதம் விதிக்கப்படும் என துபாய் காவல்துறை எச்சரிக்கை..!!

Published: 28 Mar 2021, 12:54 PM |
Updated: 28 Mar 2021, 2:32 PM |
Posted By: admin

துபாயின் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் வேகமான பாதையில் (fast lane) சரியான வேக வரம்பிற்கு வாகனம் ஓட்டினாலும் கூட மற்ற வாகன ஓட்டிகளுக்கு வழி விட மறுப்பது துபாயில் சட்டவிரோதமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாய் காவல்துறை மற்றும் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வேகமான பாதையில் ஓட்டுவதற்கான விதிமுறைகள் குறித்த ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த பாதையானது முந்திக்கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் அவசரகால வாகனங்களுக்கு மட்டுமே என்று காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு நினைவுபடுத்தியுள்ளனர்.

மேலும் துபாய் காவல்துறையும் RTA-வும் வாகன ஓட்டிகளுக்கு இது குறித்து விளக்கமளிக்கையில், “நீங்கள் வேறொரு வாகனத்தை முந்தவில்லையெனில், வேகமான பாதையை பயன்படுத்த வேண்டாம்.. அதே போல், வேகமான பாதையில் மற்ற வாகனங்களுக்கு வழி விட மறுப்பது சட்டவிரோதமானது. நெடுஞ்சாலையில் சுமுகமான போக்குவரத்தை உறுதிசெய்ய எப்போதும் சரியான பாதையில் ஓட்டுங்கள். வேகமான வாகனம் பின்னால் இருந்து உங்களை அணுகினால், நீங்கள் வேக வரம்பிற்குள் வாகனம் ஓட்டினாலும் அந்த வாகனத்திற்கு வழி விடுங்கள்” என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

வழி விட தவறும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக காவல்துறை அதிகாரிகளால் 400 திர்ஹம் அபராதம் மற்றும் 4 கரும்புள்ளிகள் (Blackpoints) வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன் செல்லும் வாகனத்திலிருந்து பாதுகாப்பான தூரத்தை வைத்திருக்கத் தவறினால் வாகன ஓட்டிகளுக்கு எதிராக 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

“ஓட்டுநர் உங்களுக்கு வழி விடாவிட்டால், டெயில்கேட்டிங் (tailgating) செய்வதைத் தவிர்த்து, மற்ற வாகனத்திலிருந்து பாதுகாப்பான தூரத்தை கடைபிடியுங்கள். மேலும் வேகமான பாதை மற்ற வாகனங்களை முந்திக்கொள்வதற்கும், அவசரகால வாகனங்களுக்கும் மட்டுமே முன்னுரிமை உள்ளது என்பதை நினைவில் கொள்க” என்றும் துபாய் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT