ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று முதல் அல்ஹிந்த் மூலம் இந்திய பாஸ்போர்ட் சேவைகள் தொடக்கம்: முதல் நாளே சேவை மையங்களில் குவிந்த ஆயிரக்கணக்கானோர்!!

Published: 22 Jul 2026, 1:23 PM |
Updated: 22 Jul 2026, 1:25 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் ‘அல்ஹிந்த் டூர்ஸ் & டிராவல்ஸ்’ (AlHind Tours & Travels) மூலம் இந்தியக் பாஸ்போர்ட், விசா, சான்றொப்பம் (attestation) மற்றும் பிற தூதரகச் சேவைகள் இன்று (ஜூலை 22, புதன்கிழமை) அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இது கடந்த மூன்று வாரங்களாக முன்பதிவு செய்வதில் சிரமங்களை எதிர்கொண்ட ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு நிம்மதி அளிப்பதாக உள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இச்சேவைகள் அமீரகம் முழுவதும் உள்ள 16 இந்தியத் தூதரக விண்ணப்ப மையங்கள் (ICACs) மூலம் வழங்கப்படுகின்றன. இதன் விளைவாக, அபுதாபியில் உள்ள தூதரகத்திலோ அல்லது துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திலோ இனி பாஸ்போர்ட், விசா மற்றும் சான்றொப்பச் சேவைகள் வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிப்பணி ஒப்பந்தம் (outsourcing contract) தொடர்பான சட்டச் சிக்கலால், கடந்த 17 ஆண்டுகளில் முதல் முறையாக ஜூலை 1 முதல் இந்தியத் தூதரகங்களே நேரடியாகச் சேவைகளை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் பல வாரங்களாக நிலவிய நிச்சயமற்ற தன்மைக்குப் பிறகே இந்த புதிய ஏற்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது.

ADVERTISEMENT

விடியற்காலைக்கு முன்பே நீண்ட வரிசை

தற்போது, வெளிப்பணி மூலம் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதையடுத்து, புதன்கிழமை அதிகாலை 5.45 மணிக்கே பர் துபாயில் உள்ள UW மாலில் (UW Mall) அமைந்துள்ள அல்ஹிந்தின் முதன்மைத் தூதரகச் சேவை மையத்திற்கு வெளியே ஏராளமான இந்தியர்கள் வரிசையில் காத்திருக்கும் காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன.

கோடைக்காலப் பயண நெரிசல் மிகுந்த இந்தக் காலத்தில், இந்தியத் தூதரகங்கள் மூலம் முன்பதிவு செய்யப் போராடிய பல விண்ணப்பதாரர்கள், இந்த புதிய ஏற்பாட்டால் நிம்மதி அடைந்ததாகத் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT

ஷார்ஜாவில் வசிக்கும் இந்தியர் ஒருவர் தனது பாஸ்போர்ட்டின் செல்லுபடியாகும் காலம் ஆறு மாதங்களுக்கும் குறைவாக இருந்ததால் குடியிருப்பு விசா (residence visa) புதுப்பிப்பு நிராகரிக்கப்பட்டதாகவும், இதனால் தனது பயணத் திட்டங்கள் நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமையன்று துணைத் தூதரகத்திற்கு வெளியே மூன்று மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்தும், பாஸ்போர்ட்டைப் புதுப்பிப்பதற்கான முன்பதிவைப் பெற முடியவில்லை என்றும் கவலை தெரிவித்த அந்த குடியிருப்பாளர், “அல்ஹிந்த் நிறுவனம் சேவையை ஏற்றுக்கொண்டதை அறிந்தபோது, ​​அது எங்கள் பிரார்த்தனைக்குக் கிடைத்த பதிலாகத் தோன்றியது. உடனடியாக இணையதளத்தில் உள்நுழைந்து UW மால் மையத்தில் காலை 8.30 மணிக்கான முன்பதிவைச் செய்து, அதிகாலை 5.45 மணி முதல் இங்கே காத்திருக்கிறோம்.” என்றும் தெரிவித்துள்ளார்.

சுமார் 2,000 முன்பதிவுகள்

செவ்வாய்க்கிழமை மாலை தூதரகம் அறிவிப்பை வெளியிட்ட உடனேயே, முன்பதிவுகளுக்கான தேவை பெருமளவில் அதிகரித்ததாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். AlHind Tours & Travels-இன் தலைவரும் நிறுவனருமான முகமது ஹாரிஸ் டி. அவர்களின் கூற்றுப்படி, அனைத்து மையங்களிலும் உள்ள சுமார் 2,000 முன்பதிவு இடங்கள் (appointment slots) சில நிமிடங்களிலேயே முன்பதிவு செய்யப்பட்டன என்று கூறியுள்ளார்.

மேலும், “இந்தச் சேவைகள் எப்போது தொடங்கும் என்று பலர் ஆவலுடன் காத்திருந்தனர்,” என்று ஹாரிஸ் கூறியுள்ளார்..

தொடர்ந்து பேசிய அவர், “எங்கள் மையங்களைத் தொடங்க நாங்கள் முழுமையாகத் தயாராக இருந்தோம். எனவே இந்தியத் தூதரகத்திடமிருந்து அனுமதி கிடைத்தவுடன், முன்பதிவுக்கான வாய்ப்புகளைத் திறந்துவிட்டோம். முதல் வாரத்தில் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, தினமும் காலை 9 மணி மற்றும் இரவு 9 மணிக்கு கூடுதல் முன்பதிவு இடங்கள் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இதில் ‘பிரீமியம்’ (கூடுதல் கட்டணச் சிறப்பு) சேவைகள் எதுவும் இருக்காது என்பதை தெளிவுபடுத்திய அவர், “அனைவருக்கும் ஒரே தரமான சேவையை வழங்குவதே எங்கள் நோக்கம். ஒவ்வொரு விண்ணப்பதாரரும் முழு செயல்முறையையும் 30 நிமிடங்களுக்குள் முடிப்பதை நாங்கள் உறுதிசெய்ய விரும்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை காலை 8 மணிக்கு, சேவைகள் தொடங்குவதற்கு முன்னதாக செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, இந்தியத் தூதரக அதிகாரிகள் நிறுவனத்தின் UW Mall மையத்திற்கு வருகை தந்தனர்.

சுமார் 12,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த மையத்தில் 75 சேவை கவுண்டர்கள் உள்ளன. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான (People of Determination) பிரத்யேக கவுண்டர்களும் அடங்கும்.

ஹாரிஸின் கூற்றுப்படி, உலகளவில் வெளிநாடுகளில் செயல்படும் மிகப்பெரிய இந்தியத் தூதரக விண்ணப்ப மையங்களில் இதுவும் ஒன்றாகும்.

முன்பதிவு செய்வது எப்படி?

விண்ணப்பதாரர்கள் consularsevainuae.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். புதிய இடங்கள் தினமும் காலை 9 மணி மற்றும் இரவு 9 மணிக்கு என இருமுறை வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, அனைத்து இந்தியத் தூதரக விண்ணப்ப மையங்களும் (ICAC) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் முன்பதிவு நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

இருப்பினும், தட்கல் (Tatkal) பாஸ்போர்ட் விண்ணப்பங்கள், பச்சிளம் குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் சேவைகள், அவசரக்காலச் சான்றிதழ்கள் (EC) மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான சேவைகள் ஆகியவை முன்பதிவு இல்லாமலே (walk-in), ‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சேவை கட்டணங்கள்

இந்திய அரசுக்கான கட்டணங்களைத் தவிர, 19 திர்ஹம்ஸ் சேவை கட்டணத்தை (VAT உட்பட) அல்ஹிந்த் நிறுவனம் வசூலிக்கும்.

இந்தக் கட்டணத்தில் படிவம் பூர்த்தி செய்தல், புகைப்படம் எடுத்தல், ஆவணங்களைத் தட்டச்சு செய்தல், உள்நாட்டு கூரியர் சேவை, பிரிண்ட்-அவுட்கள் மற்றும் நகல் எடுத்தல் (photocopies) போன்ற கூடுதல் சேவைகளும் அடங்கும்.

புதிய இந்தியத் தூதரக ஒப்பந்தங்களுக்கு ஏலம் கோருவதிலிருந்து முந்தைய சேவை வழங்குநரான BLS இன்டர்நேஷனல் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக சேவைகள் ஒப்பந்தத்தை அல்ஹிந்த் டூர்ஸ் & டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு இந்தியத் தூதரகம் வழங்கியதை அடுத்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளிப்பணி ஒப்படைப்பு செயல்முறை தொடங்கியது.

அல்ஹிந்த் நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் 16 மையங்களை நிறுவி, செயல்பாட்டுத் தயாரிப்புகளை முடித்திருந்தபோதிலும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இரண்டு தோல்வியடைந்த ஏலதாரர்கள் டெண்டர் செயல்முறையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்ததால், இந்தச் செயல்பாடு தாமதமானது.

இந்த சட்டப் போராட்டத்தின் விளைவாக, அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகமும், துபாயில் உள்ள துணைத் தூதரகமும், பாஸ்போர்ட், விசா மற்றும் சான்றளிப்பு சேவைகளை தற்காலிகமாக, முன்பதிவு அடிப்படையில் மட்டுமே நேரடியாகக் கையாளத் தொடங்கின.

இப்படியான சூழலில், இந்த வாரத் தொடக்கத்தில், தற்போதுள்ள எல்-1 ஒப்பந்ததாரர்களான (ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல்ஹிந்த் டூர்ஸ் & டிராவல்ஸ்) அல்லது வேறு ஏதேனும் முகமையை ஈடுபடுத்திக்கொள்ளலாம் என்று இந்திய உச்ச நீதிமன்றம் அமைச்சகத்திற்கு அனுமதி அளித்தது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel