ADVERTISEMENT

எதிஹாட் ரயில்: ஒரு மாதம் முன்னதாகவே திறக்கப்படவுள்ள இரண்டு பயணிகள் நிலையங்கள்!!

Published: 23 Jul 2026, 7:58 PM |
Updated: 23 Jul 2026, 7:58 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் முதல் முறையாக பயணிகள் ரயில் சேவையானது கடந்த ஜூன் 30 அன்று துவங்கப்பட்ட நிலையில் தற்பொழுது எதிஹாட் ரயிலின் சையத் சிட்டி மற்றும் லிவா ஆகிய இடங்களில் உள்ள எதிஹாட் ரயில் பயணிகள் நிலையங்கள் ஒரு மாதம் முன்னதாகவே திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சேவைகள் இப்போது நவம்பர் 30, 2026 அன்று தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அல் தஃப்ரா பிராந்தியத்தில் ஆட்சியாளரின் பிரதிநிதியாக உள்ள ஷேக் ஹம்தான் பின் சையத் அல் நஹ்யான், எதிஹாட் ரயில் நிறுவனத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. அப்பிராந்தியத்தின் வருடாந்திரத் திருவிழாக் காலம் தொடங்கும் அதே நேரத்தில் நிலையங்களைத் திறக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள் நடைபெறும் பரபரப்பான இந்தக் காலகட்டத்தில், அல் தஃப்ராவுக்குப் பயணம் செய்யும் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான போக்குவரத்து வசதியை இந்த நடவடிக்கை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

எதிஹாட் ரயில் பயணிகள் நிலையங்கள் திறப்புக்கான கால அட்டவணை

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள தனது பயணிகள் நிலையங்களை படிப்படியாகத் திறப்பதற்கான கால அட்டவணையை எதிஹாட் ரயில் நிறுவனம் பின்வருமாறு அறிவித்துள்ளது:

  • அபுதாபி மற்றும் ஃபுஜைரா: ஜூன் 30, 2026
  • துபாய் மற்றும் அல் தைத்: செப்டம்பர் 30, 2026
  • சையத் சிட்டி மற்றும் லிவா: நவம்பர் 30, 2026 (முந்தைய அட்டவணையிலிருந்து மாற்றப்பட்டது)
  • பிற அல் தஃப்ரா நிலையங்கள்: டிசம்பர் 20, 2026
  • ஷார்ஜா: மார்ச் 30, 2027

சையத் சிட்டி மற்றும் லிவா நிலையங்கள் முன்னதாகவே திறக்கப்படுவது, அல் தஃப்ரா பிராந்தியத்துடனான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் என்பதோடு, அப்பிராந்தியத்தின் மிக முக்கியமான வருடாந்திரக் காலங்களில் ஒன்றான திருவிழாக் காலத்தில் சுற்றுலாவையும் ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel