ADVERTISEMENT

ஃபுஜைராவில் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து: தாயும் ஒரு வயது குழந்தையும் பலியான சோகம்!!

Published: 24 Jul 2026, 7:47 PM |
Updated: 24 Jul 2026, 7:47 PM |
Posted By: Menaka

கடந்த புதன்கிழமையன்று ஃபுஜைரா-கோர்ஃபக்கான் செல்லும் சாலையில், ஒரு குடும்பத்தினர் பயணித்த கார் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியதில் 28 வயதுடைய தாயும் அவரது ஒரு வயது மகளும் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்த மோசமான விபத்தில் உயிரிழந்தப் பெண்ணின் கணவரும், அவர்களின் மூன்று வயது மகளும் உயிர் பிழைத்ததாகவும், அவர்கள் ஃபுஜைராவில் உள்ள ஷேக் கலீஃபா மருத்துவமனையில் சீரான உடல்நிலையுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அதிகாரிகளிள் அளித்துள்ள தகவலின்படி, ஃபுஜைரா-கோர்ஃபக்கான் சாலையில் சென்றுகொண்டிருந்த அந்த எமிராட்டி குடும்பத்தின் வாகனம், ஃபௌஸ் பெட்ரோலியம் (Fouz Petroleum) பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியது தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த விபத்து குறித்த தகவல் ஃபுஜைரா காவல் கட்டுப்பாட்டு அறைக்குக் கிடைத்ததும், அவசரக்காலக் குழுக்களும் தேசிய ஆம்புலன்ஸ் பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக அவசர மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்ட போதிலும் தாயும் அவரது கைக்குழந்தையும் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேவேளையில், தந்தையும் தம்பதியரின் மூத்த மகளும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

உயிரிழந்த இருவரின் உடல்களும் வியாழக்கிழமை கோர்ஃபக்கானில் நல்லடக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமூகத்தினர் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்த மோதல் விபத்துக்கான சூழல் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஓட்டுநரின் கவனச்சிதறல் ஒரு முக்கிய காரணியாக ஆராயப்பட்டு வருகிறது.

காவல்துறை அறிவுறுத்தல்

இந்த உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்தைத் தொடர்ந்து, வாகனம் ஓட்டும்போது முழு கவனத்துடன் இருக்குமாறு ஃபுஜைரா காவல்துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

கவனத்தில் ஏற்படும் ஒரு சிறிய தொய்வு கூட துயரமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று ஃபுஜைரா காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்துப் பிரிவு இயக்குனர் பரிகேடியர் சலே முகமது அப்துல்லா அல் தன்ஹானி எச்சரித்துள்ளார்.

மேலும், சாலையில் நின்றுகொண்டிருக்கும் வாகனங்களை நெருங்கும்போது வேகத்தைக் குறைக்கவும், பாதுகாப்பான இடைவெளியைப் பராமரிக்கவும், முந்திச் செல்வதற்கு (overtaking) முன் அருகிலுள்ள பாதைகள் (lanes) காலியாக இருப்பதை உறுதி செய்யவும், மற்றும் கடுமையான விபத்துகளின் அபாயத்தை அதிகரிக்கும் வகையிலான திடீர் பாதை மாற்றங்களைத் தவிர்க்கவும் அவர் ஓட்டுநர்களை வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வாகனம் ஓட்டும்போது கவனத்தைச் சிதறடிக்கும் செயல்களில் ஈடுபடுவதையோ அல்லது மொபைல் பயன்படுத்துவதையோ தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளுக்கு அந்த மூத்த காவல்துறை அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். அதேவேளையில், போக்குவரத்து குறியீடுகளைப் பின்பற்றுமாறும், சாலை மற்றும் போக்குவரத்து நிலைமைகளுக்கு ஏற்ப வேகத்தை அமைத்துக்கொண்டு அனைத்து சாலைப் பயனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel