சந்தை நிலவரங்களைக் கண்காணிக்கவும், நுகர்வோர் விலைகளை ஒப்பிட்டுப் பார்க்க உதவவும், அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலைகளை ஐக்கிய அரபு அமீரகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதில் ஆகஸ்ட் 2026 மாதத்திற்கான சமீபத்திய தரவுகள் இப்போது வெளியாகியுள்ளன. இது அரிசி, பால், முட்டை, கோழி, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருட்களுக்கு குடியிருப்பாளர்கள் செலுத்திய விலையை வெளிப்படுத்துகிறது.
பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சகம், தனது ‘அத்தியாவசியப் பொருட்களின் விலை விவரத் தளம்’ (Essential Goods Prices Platform) மூலம் 13 சில்லறை விற்பனை நிலையங்களில் விலைகளைக் கண்காணித்ததாகத் தெரிவித்துள்ளது. இதில் பல்வேறு அளவுகளில் (பேக் சைஸ்) கிடைக்கும் 33 அத்தியாவசியப் பொருட்கள் கணக்கில் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அரிசி, மாவு மற்றும் பால் பொருட்களின் விலைகள்
1 கிலோ பாசுமதி அரிசியின் சராசரி விலை 16.62 திர்ஹம் ஆகவும், 5 கிலோ பாக்கெட்டின் சராசரி விலை 45.53 திர்ஹம் ஆகவும் இருந்தது.
முதல் மற்றும் இரண்டாம் தர மாவின் 1 கிலோ பாக்கெட்டின் சராசரி விலை 7.76 திர்ஹம் ஆகவும், 2 கிலோ பாக்கெட்டின் சராசரி விலை 12.26 திர்ஹம் ஆகவும் இருந்தது.
பால் பொருட்களைப் பொறுத்தவரை, 500 மி.லி முழு கொழுப்புச் சத்து கொண்ட (full-fat) பால் சராசரியாக 3.91 திர்ஹம் ஆகவும், 1 லிட்டர் அட்டைப் பெட்டி (carton) 9.46 திர்ஹம் ஆகவும் இருந்தது. 170 கிராம் தயிர் சராசரி விலை 1.97 திர்ஹம் ஆக இருந்தது.
சமையல் எண்ணெய், முட்டை மற்றும் கோழி இறைச்சி
1 லிட்டர் கனோலா எண்ணெயின் (Canola oil) சராசரி விலை 15.86 திர்ஹம் ஆகவும், 1.5 லிட்டர் பாட்டிலின் சராசரி விலை 23.97 திர்ஹம் ஆகவும் இருந்தது.
அதேபோல், சோள எண்ணெயின் (Corn oil) சராசரி விலை 750 மி.லி-க்கு 13.85 திர்ஹம் ஆகவும், 1.5 லிட்டருக்கு 24.92 திர்ஹம் ஆகவும் இருந்தது. சூரியகாந்தி எண்ணெயின் சராசரி விலை 1 லிட்டருக்கு 19.31 திர்ஹம் ஆகவும், 3 லிட்டருக்கு 35.70 திர்ஹம் ஆகவும் இருந்தது.
பழுப்பு நிற முட்டைகள் (brown eggs) கொண்ட 30 முட்டைகள் அடங்கிய பாக்கெட்டின் சராசரி விலை 23.05 திர்ஹம் ஆக இருந்தது. அதே சமயம் வெள்ளை முட்டைகளின் விலை 22.97 திர்ஹம் ஆக இருந்தது.
இறைச்சியைப் பொறுத்தவரை, புதிய முழு கோழி இறைச்சியின் சராசரி விலை 800 கிராமுக்கு 18.94 திர்ஹம் ஆகவும், 1 கிலோவுக்கு 22.97 திர்ஹம் ஆகவும் இருந்தது.
மேலும், தூய வெள்ளைச் சர்க்கரையின் சராசரி விலை 1 கிலோவுக்கு 8.75 திர்ஹம் ஆகவும், 2 கிலோவுக்கு 10.94 திர்ஹம் ஆகவும் இருந்தது.
பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த விலைகள்
ஆகஸ்ட் மாதத்தில் கண்காணிக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் காணப்பட்ட மிகக் குறைந்த விலைகளையும் அமைச்சகம் பதிவு செய்துள்ளது. அவற்றில் மிகக் குறைந்த விலையிலான 170 கிராம் தயிர் 1.42 திர்ஹம்களுக்கும், 500 மி.லி முழு கொழுப்புச் சத்து கொண்ட பால் (full fat milk) 3.22 திர்ஹம்கள் என்ற குறைந்த விலையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தள்ளது.
பிற குறைந்தபட்ச விலைகள் பின்வருமாறு:
- வெள்ளை கொண்டைக்கடலை (500 கிராம்): 3.24 திர்ஹம்ஸ்
- பிரட் (600 கிராம்): 4.47 திர்ஹம்ஸ்
- மொச்சை (fava beans) (450 கிராம்): 4.93 திர்ஹம்கள்
ஏப்ரல் 2026-ல் தொடங்கப்பட்ட அதிகாரப்பூர்வ டிஜிட்டல் தளம், அத்தியாவசியப் பொருட்களின் விலை நிலவரம் குறித்த நம்பகமான தரவுகளை அதிகாரிகளுக்கு வழங்குவதோடு, சந்தை கண்காணிப்பு, விலை வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறை மேற்பார்வை ஆகியவற்றை வலுப்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel