ADVERTISEMENT

துபாயில் தொழிலாளர் குடியிருப்புகளுக்கு புதிய விதிமுறை.. முனிசிபாலிட்டி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Published: 21 Sep 2026, 8:38 AM |
Updated: 21 Sep 2026, 8:53 AM |
Posted By: Menaka

துபாய் எமிரேட்டானது தொழிலாளர்களுக்கான தங்குமிட வசதிகளில் புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தொழிலாளர்களின் வாழ்க்கைச் சூழலை மேம்படுத்தும் வகையில் குறைந்தபட்ச இடவசதி மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகள் இதில் அடங்கும். துபாய் நகராட்சியால் அறிவிக்கப்பட்ட புதிய வழிகாட்டுதல்களின்படி, ஒவ்வொரு தொழிலாளிக்கும் தூங்குவதற்கு குறைந்தபட்சம் 3.7 சதுர மீட்டர் இடம் ஒதுக்கப்பட வேண்டும். அத்துடன், தொழிலாளர் பகுதிகளில் உள்ள சேவைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், ஒரு நபருக்கு 8.9 முதல் 10.3 சதுர மீட்டர் வரையிலான மொத்தத் தரைப்பரப்பு (gross floor area) ஒதுக்கப்பட வேண்டும்.

ADVERTISEMENT

மேலும், ஓய்வு மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளுக்குப் போதுமான இடவசதியை அளிக்கும் வகையில், ஒரு நபருக்கு 0.75 முதல் 1.5 சதுர மீட்டர் என்ற விகிதத்தில் பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகள் வழங்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தரநிலைகள், ‘தொழிலாளர் தங்குமிடக் கொள்கை’யின் (Workers’ Accommodation Policy) கீழ் அரசு கூட்டாளர்களுடன் இணைந்து துபாய் முனிசிபாலிட்டி செயல்படுத்தி வரும் விரிவான திட்டங்களின் ஒரு பகுதியாகும்.

ADVERTISEMENT

1,417 கட்டிடங்களில் ஆய்வு

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தொழிலாளர் தங்குமிடங்களுக்கான ஒருங்கிணைந்த ‘ஸ்மார்ட்’ வகைப்பாடு முறையை துபாய் முனிசிபாலிட்டி அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், கட்டிடங்களின் கட்டமைப்பு நிலை மற்றும் பொது சுகாதாரம், பாதுகாப்புத் தரநிலைகளுக்கு அவை இணங்கி உள்ளனவா என்பதை மதிப்பிட 1,417 கட்டிடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

அதேசமயம், ‘மாதிரித் தொழிலாளர் தங்குமிட’ (Model Workers’ Accommodation) முன்முயற்சியின் கீழ், சிறந்த தரநிலைகளைப் பூர்த்தி செய்த 19 தங்குமிடங்கள் அங்கீகரிக்கப்பட்டன. அவற்றில் மூன்றுக்கு பிளாட்டினம் (Platinum), ஒன்பதுக்கு தங்கம் (Gold) மற்றும் ஏழுக்கு வெள்ளி (Silver) ஆகிய தரநிலைகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதற்கிடையில், தொழிலாளர் தங்குமிடங்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள் மற்றும் செயல்திறன் குறியீடுகளை ஒருங்கிணைக்க ஒரு பொதுவான அரசுத் தரவுத்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இம்முறை, மேம்பாடு தேவைப்படும் பகுதிகளைக் கண்டறியவும், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் முதலீடுகளைத் திட்டமிடவும் அதிகாரிகளுக்கு உதவும் என்று கூறப்படுகிறது.

சிறந்த நடைபாதை வசதி மற்றும் பார்க்கிங்

இதனிடையே, தற்போதைய உள்கட்டமைப்பை மதிப்பிடவும், நடைபாதைகள், பாலங்கள் மற்றும் பிற வசதிகளின் தேவையை அடையாளம் காணவும் பல்வேறு தொழிலாளர் குடியிருப்புகளில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மேம்பாட்டுப் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதேவேளையில் தொழிலாளர் வசிக்கும் பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளும் உருவாக்கப்பட்டு வருவதாகவும் துபாய் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக சில்லறை விற்பனைக் கடைகள், சமூக நல வசதிகள் மற்றும் விளையாட்டு வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் தொழிலாளர்கள் ஷாப்பிங், பொழுதுபோக்கு மற்றும் உடற்பயிற்சி நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ள முடியும்.

பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு முக்கியத்துவம்

தொழிலாளர் தங்குமிடங்களை நிர்வகிக்கும் சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்துவதில் இந்தச் செயலாக்கத் திட்டம் கவனம் செலுத்துவதாக, துபாய் முனிசிபாலிட்டியின் சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு முகமையின் (Environment, Health and Safety Agency) தற்காலிக தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் நசீம் முகமது ரஃபி தெரிவித்துள்ளார். சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப தொடர்புடைய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மறுஆய்வு செய்தல், இணக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் திட்டங்களின் விரைவான வளர்ச்சிக்கு ஆதரவளித்தல் ஆகியவை இதில் அடங்கும்.

மேலும், “தொழிலாளர் பகுதிகள் முழுவதும் உள்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகளை மேம்படுத்துவதும், மிக உயர்ந்த பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரம், பாதுகாப்புத் தரங்களுக்கு ஏற்ப கட்டிடங்களைத் தரம் உயர்த்துவதும் எங்கள் நோக்கமாகும்,” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், ஒவ்வொரு தொழிலாளர் சமூகத்தின் குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் அத்தியாவசிய சேவைத் திட்டங்களையும் நகராட்சி விரிவுபடுத்தி வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த முன்னெடுப்புகள் துபாய் 2040 நகர்ப்புற பெருந்திட்டம் மற்றும் துபாய் வாழ்க்கைத்தர உத்தி 2033 ஆகியவற்றுக்கு ஆதரவளிப்பதாக துபாய் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel