ADVERTISEMENT

துபாய் டியூட்டி ஃப்ரீ டிராவில் இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்: 5 ஆண்டு கால காத்திருப்புக்கு பிறகு விழுந்த 1 மில்லியன் டாலர் பரிசு!!

Published: 25 Sep 2026, 6:44 PM |
Updated: 25 Sep 2026, 6:44 PM |
Posted By: Menaka

துபாய் டியூட்டி ஃப்ரீ (Dubai Duty Free) டிராவில் இந்தியர் ஒருவருக்கு 1 மில்லியன் டாலர் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. குலுக்கல் சீட்டு வாங்கியிருந்ததையே கிட்டத்தட்ட மறந்துவிட்டிருந்த பானு சோபானி என்ற 40 வயதான இந்தியர், தனக்கு 1 மில்லியன் டாலர் (3.67 மில்லியன் திர்ஹம்) பரிசு விழுந்திருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பைக் கேட்டு அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்ததாகத தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

துபாயில் இருந்த பானு சோபானிக்கு, புதன்கிழமை காலை 11.30 மணியளவில் அந்த எதிர்பாராத அழைப்பு வந்தது. அழைத்தவர் ராஃபிள் டிக்கெட்டுகள் தொடர்பான ஒரு சலுகை அல்லது விளம்பரத்தைப் பற்றிப் பேசுகிறார் என்றே அவர் முதலில் நினைத்திருக்கிறார்.

மற்ற வெற்றியாளர்களைப் போலவே, அந்தச் செய்தி ஒரு வேடிக்கையான விஷயம் அல்லது குறும்பு என்றுதான் முதலில் நினைத்ததாக சோபானி கூறியுள்ளார்.

ADVERTISEMENT

முடிவைச் சரிபார்க்குமாறு அழைத்தவர் கூறியதும், துபாயில் வசிக்கும் சோபானி துபாய் டியூட்டி ஃப்ரீயின் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டுள்ளார். அதன் பிறகுதான் தான் கோடீஸ்வரராகிவிட்டதை நம்பியதாக அவர் கூறியுள்ளார்.

வணிக நிமித்தமாகப் போலந்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது, ​​செப்டம்பர் 2 அன்று சோபானி இரண்டு துபாய் டியூட்டி ஃப்ரீ சீட்டுகளை வாங்கியுள்ளார். அவற்றில் ஒன்று ‘மிலேனியம் மில்லியனர்’ குலுக்கலுக்கும், மற்றொன்று ‘ரேஞ்ச் ரோவர்’ (Range Rover) காருக்கான குலுக்கலுக்கும் ஆகும்.

ADVERTISEMENT

அவர் வெற்றி பெற்ற சீட்டு ‘மிலேனியம் மில்லியனர் சீரிஸ் 557’-ஐச் சேர்ந்த எண் 0489 ஆகும். இது ‘கான்கோர்ஸ் பி’ (Concourse B) பகுதியில் வாங்கப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் துபாய் டியூட்டி ஃப்ரீயின் குலுக்கல் போட்டிகளில் பங்கேற்று வரும் சோபானி, பயணங்களின்போது வழக்கமாக ஆண்டுக்கு ஐந்து முதல் 10 டிக்கெட்டுகள் வரை வாங்குவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், டிக்கெட்டுகளை தேர்ந்தெடுப்பதில் எந்தவொரு சிறப்பு உத்தியையும் பின்பற்றுவதில்லை என்றும், பெரும்பாலும் விமானத்திற்குச் செல்ல அவசரமாக இருப்பதால் விரைவாகவே எண்களைத் தேர்ந்தெடுத்துவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரிசுத் தொகையை முதலீடு செய்யும் திட்டம்

கடந்த 10 ஆண்டுகளாக துபாயில் வசித்து வரும் சோபானி, பர் துபாயில் ஜவுளி மற்றும் ஆடைத் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். அவர் தனது மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் தாயுடன் வசித்து வருகிறார்.

துபாயில் ஏற்கனவே நான்கு சொகுசு வீடுகளை வைத்துள்ள சோபானி, இந்தப் பரிசுத் தொகையை நிலையான வைப்பு நிதி மற்றும் பிற முதலீடுகளில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளார். சரியான வாய்ப்பு கிடைத்தால் மேலும் சொத்துக்களை வாங்கவும் விருப்பம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பரிசுத் தொகையின் ஒரு பகுதியை இந்தியாவில் உள்ள ஒரு கோவிலுக்கு நன்கொடையாக வழங்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

283-வது இந்திய கோடீஸ்வரர்

பெரிய தொகையை வென்றிருந்தாலும், ‘துபாய் டியூட்டி ஃப்ரீ’ (Dubai Duty Free) போட்டிகளில் பங்கேற்பதை நிறுத்தப்போவதில்லை என்பதையும் சோபானி வெளிப்படுத்தியுள்ளார்.

1999-ல் ‘மிலேனியம் மில்லியனர்’ (Millennium Millionaire) திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, 1 மில்லியன் டாலர் (3.67 மில்லியன் திர்ஹம்) பரிசை வென்ற 283-வது இந்தியர் இவராவார்.

‘துபாய் டியூட்டி ஃப்ரீ’ டிக்கெட்டுகளை வாங்குபவர்களில் இந்தியர்களே தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel