அமீரகக் குடியிருப்பாளர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்த துபாய் மற்றும் அபுதாபிக்கு இடையிலான புதிய பயணிகள் ரயில் சேவை இன்று காலை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. இது அமீரகத்தின் பயண வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாகத் திகழ்கிறது. புதன்கிழமை காலை துபாயிலிருந்து புறப்பட்ட முதல் எத்திஹாட் ரயிலானது குறித்த நேரத்தில் அபுதாபியைச் சென்றடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் பயணிகள் இவ்விரு எமிரேட்களுக்கு இடையே ரயிலில் பயணிக்கும் முதல் அனுபவத்தைப் பெற்றனர்.
ஜுமைரா கோல்ஃப் எஸ்டேட்ஸில் (Jumeirah Golf Estates) உள்ள அல் யலயிஸ் நிலையத்திலிருந்து (Al Yalayis Station) காலை 6:14 மணிக்கு புறப்பட்ட ரயில், தனது பயணத்தை சுமார் ஒரு மணி நேரம் நான்கு நிமிடங்களில் நிறைவு செய்தது. இதில் பயணித்தவர்களுக்கு, இந்தத் தொடக்கப் பயணம் என்பது வெறும் புதிய பயண முறை மட்டுமல்ல. அமீரகத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் தேசிய பயணிகள் ரயில் சேவையை நேரில் அனுபவிக்கும் வாய்ப்பாகவும் அமைந்தது. மேலும், இது வாகனங்களை ஓட்டாமலேயே இவ்விரு எமிரேட்களுக்கு இடையே பயணிக்க விரும்பும் மக்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்குகிறது.
அபுதாபி, ஃபுஜைரா மற்றும் ஷார்ஜாவின் அல் தைத் ஆகியவற்றுடன் தற்போது துபாயும் இந்த ரயில் வலையமைப்பில் இணைந்துள்ள நிலையில், ‘எதிஹாட் ரயில்’ (Etihad Rail) தனது பயணிகள் சேவையை விரிவுபடுத்தும் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.

இப்போது துபாய் இணைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் துபாய், அபுதாபி மற்றும் ஃபுஜைரா ஆகிய இடங்களுக்கு இடையே நேரடியாகப் பயணிக்க முடியும். எத்திஹாட் ரயில் நிறுவனம் துபாய் மற்றும் அபுதாபி இடையே தினமும் 10 பயணங்களை இயக்குகிறது. அதேவேளையில், அபுதாபி மற்றும் ஃபுஜைரா இடையே தினமும் ஆறு சேவைகள் இயக்கப்படுகின்றன.
டிக்கெட் கட்டணம் 39 திர்ஹம் முதல் தொடங்குகிறது
துபாய் மற்றும் அபுதாபி இடையே பயணிக்கும் பயணிகள் பின்வரும் வகுப்புகளுக்கு முன்பதிவு செய்யலாம்:
- கம்போர்ட் கிளாஸ் (Comfort Class): 39 திர்ஹம் முதல்
- பிரீமியம் கிளாஸ் (Premium Class): 109 திர்ஹம் முதல்
மேலும், துபாய்-ஃபுஜைரா சேவையும் கிடைக்கிறது. இதில் கம்போர்ட் கிளாஸ் கட்டணம் 29 திர்ஹம் முதல் தொடங்குகிறது.
எத்திஹாட் ரயில் இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலமாகவும், நிலையங்களில் உள்ள டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் (ticket vending machines) மூலமாகவும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
துபாய்-அபுதாபி இடையிலான முதல் பயணத்தை அனுபவிக்கும் பயணிகள்
துபாய் மற்றும் அபுதாபி ஆகிய இரு எமிரேட்களுக்கு இடையேயான முதல் பயணிகள் ரயில் சேவையில் பயணித்தவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

பயணிகளின் கூற்றுப்படி, வாகனத்தை ஓட்ட வேண்டிய அவசியமின்றி, அதே சமயம் நிம்மதியான பயணத்தை அனுபவித்தவாறே துபாய்-அபுதாபி பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு பலருக்கும் ஈர்ப்பை ஏற்படுத்தியதாகத் தருகிறது. மேலும், விசாலமான ரயில் பெட்டிகள் மற்றும் ரயிலுக்குள் உள்ள வசதிகள், பயணிகள் தங்கள் பயண நேரத்தை வேலை செய்வதற்கோ, ஓய்வெடுப்பதற்கோ அல்லது பயணத்தை ரசிப்பதற்கோ பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை வழங்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அபுதாபியை ரயில் சரியான நேரத்தில் சென்றடைந்தது இந்த முதல் சேவையின் முக்கியத்துவத்தை அதிகரித்ததுடன், இரு எமிரேட்களுக்கும் இடையே வழக்கமான பயணிகள் போக்குவரத்து சேவையின் தொடக்கத்தையும் குறிப்பதாக அமைந்தது.
தினசரி பயணிகளுக்கு ஒரு புதிய வாய்ப்பு
துபாய்-அபுதாபி இடையிலான இந்த முதல் பயணிகள் பயணம், ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய பயணிகள் ரயில் கட்டமைப்பை உருவாக்கும் திட்டத்தில் ஒரு முக்கியமான படியாகும். வேலை, தொழில் அல்லது பொழுதுபோக்குக்காக இவ்விரு எமிரேட்களுக்கு இடையே தொடர்ந்து பயணம் செய்பவர்களுக்கு, இந்தச் சேவை ஒரு புதிய பயணத் தேர்வை வழங்கக்கூடும்.
அதுமட்டுமின்றி. தினசரி பயணத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, நாள் முழுவதும் சேவைகள் கிடைக்கும் வகையில் தனது கால அட்டவணையை வடிவமைத்துள்ளதாக எதிஹாட் ரயில் தெரிவித்துள்ளது.
இந்தச் சேவையின் அறிமுகம் துபாயை ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ந்து வரும் தேசிய பயணிகள் ரயில் வலையமைப்போடு இணைக்கிறது. அத்துடன் இந்த வலையமைப்பு வரும் மாதங்களில் கூடுதல் நிலையங்கள் மற்றும் வழித்தடங்களுடன் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel