ADVERTISEMENT

அபுதாபியில் இருந்து எதிஹாட் ரயிலில் பயணித்த UAE அதிபர்: துபாய் ரயில் நிலையத்தைத் திறந்து வைத்த ஷேக் ஹம்தான்!!

Published: 28 Sep 2026, 8:54 PM |
Updated: 28 Sep 2026, 8:57 PM |
Posted By: admin

அமீரகத்தில் அபுதாபி, ஃபுஜைரா இடையே இயக்கப்பட்டு வந்த எதிஹாட் ரயில் சேவையில் புதிய இணைப்பாக துபாய் மற்றும் அபுதாபி இடையே செப்டம்பர் 30, 2026 அன்று பயணிகள் ரயில் சேவை தொடங்கவுள்ளது. இதனை முன்னிட்டு, தேசிய ரயில் கட்டமைப்பின் அதிகாரப்பூர்வ தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் ‘எதிஹாட் ரயில்’ (Etihad Rail) நிறுவனத்தின் துபாய் நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் முன்னிலையில், துபாய் பட்டத்து இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் மற்றும் எதிஹாட் ரயில் நிறுவனத்தின் நிர்வாகக் குழுத் தலைவர் ஷேக் தியாப் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் துபாய் நிலையத்தைத் திறந்து வைத்துள்ளனர்.

இதனையடுத்து அதிகாரப்பூர்வ சேவை தொடங்குவதற்கு முன்னதாகவே, ஐக்கிய அரபு அமீரக அதிபர் அபுதாபியிலிருந்து துபாய்க்கு எதிஹாட் ரயில் மூலம் பயணம் மேற்கொண்டார். அதில் பயணத்தின்போது, ​​ரயிலின் செயல்பாட்டு முறை, அதன் தேசிய நோக்கங்கள் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரம் குறித்த விவரங்கள் அவருக்கு விளக்கப்பட்டன என கூறப்பட்டுள்ளது. அத்துடன் நிலையத்தை வந்தடைந்ததும், இத்திட்டத்தில் பணியாற்றும் பல தேசிய ஊழியர்களைச் சந்தித்த அதிபர், அவர்களுடன் நினைவுப் புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்.

ADVERTISEMENT

மேலும் நிலையத்தைப் பார்வையிட்டபோது, ​​ஷேக் ஹம்தான் மற்றும் ஷேக் தியாப் ஆகியோருக்கு நிலையத்தின் வசதிகள், செயல்பாட்டு முறை மற்றும் பயணிகளுக்கான ஒருங்கிணைந்த அனுபவம் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது. இதில் நிலையத்திற்கு வருவது, டிக்கெட் முன்பதிவு செய்வது, பயண நடைமுறைகளை முடிப்பது, ரயிலில் ஏறுவது மற்றும் இறுதி இலக்கு வரை பயணம் செய்வது உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் அடங்கும். ஷேக் ஹம்தான் தனது எதிஹாட் ரயில் டிக்கெட்டின் புகைப்படத்தையும் பகிர்ந்துகொண்டார்.

அத்துடன் செப்டம்பர் 28 தேதியிடப்பட்ட அந்த டிக்கெட்டில், துபாய் நிலையத்திலிருந்து பிற்பகல் 2:11 மணிக்கு புறப்பட்டு, அபுதாபி நிலையத்தை பிற்பகல் 3:13 மணிக்குச் சென்றடையும் விவரம் (மொத்த பயண நேரம் 1 மணிநேரம் 2 நிமிடங்கள்) இடம்பெற்றிருந்தது. மேலும் இது ‘கம்போர்ட் சேவர்’ (Comfort Saver) வகையைச் சேர்ந்த டிக்கெட் ஆகும்; இதன் தற்போதைய விலை 39 திர்ஹம்ஸ் ஆகும்.

ADVERTISEMENT

இது குறித்து ஷேக் ஹம்தான் கூறுகையில் துபாயில் உள்ள எத்திஹாட் ரயில் நிலையமானது, தலைநகர் மற்றும் நாட்டின் பிற நகரங்களுடனான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய தேசிய நுழைவாயிலாக அமைகிறது என்று தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து “தேசிய எத்திஹாட் ரயில் வலைப்பின்னலுடன் துபாயை இணைப்பது, நாட்டின் போக்குவரத்து மற்றும் செயல்பாடுகளின் மையப்பகுதியில் அதன் இருப்பை மேம்படுத்துகிறது; தேசியப் பொருளாதாரத்தில் அதன் முக்கிய பங்கை ஆதரிக்கிறது; மேலும் வணிகம், சுற்றுலா மற்றும் முதலீட்டிற்கான ஒரு உலகளாவிய மையமாக அதன் நிலையை உறுதிப்படுத்துகிறது” எனவும் கூறியுள்ளார்.

அதே போல் அபுதாபி மற்றும் ஃபுஜைரா இடையே பயணிகள் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டதிலிருந்து அவற்றுக்குக் கிடைத்துள்ள பெரும் வரவேற்பானது, இந்த புதிய போக்குவரத்து முறையின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்று ஷேக் தியாப் சுட்டிக்காட்டியுள்ளார்.

செப்டம்பர் 30, 2026 முதல், அபுதாபி, துபாய் மற்றும் ஃபுஜைரா இடையே ‘எதிஹாட் ரயில்’ சேவைகள் வழங்கப்படும். இதற்கான டிக்கெட்டுகளை ‘எதிஹாட் ரயில்’ செயலி, இணையதளம் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் இயந்திரங்கள் மூலம் முன்பதிவு செய்யலாம். ‘கம்போர்ட் கிளாஸ்’ (Comfort Class) பயணத்திற்கு 39 திர்ஹம்ஸ் மற்றும் ‘பிரீமியம் கிளாஸ்’ (Premium Class) பயணத்திற்கு 109 திர்ஹம்ஸ் என கட்டணங்கள் தொடங்குகின்றன.

அது மட்டுமல்லாமல் துபாயில் உள்ள ‘எதிஹாட் ரயில்’ நிலையம், பிரத்யேக நடைபாதை பாலம் (pedestrian bridge) மூலம் ‘ஜுமைரா கோல்ஃப் எஸ்டேட்ஸ்’ மெட்ரோ நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ‘எதிஹாட் ரயில்’ மற்றும் துபாய் மெட்ரோ இடையே பயணிகள் நேரடியாக மாறிச் செல்வதை சாத்தியமாக்குகிறது.

‘நோல்’ (Nol) பயணிகள் கட்டண முறையுடனான ஒருங்கிணைப்பு, ஒரே QR குறியீட்டைப் பயன்படுத்தி ‘எதிஹாட் ரயில்’ மற்றும் துபாய் பொதுப் போக்குவரத்து சேவைகளை முன்பதிவு செய்யவும் அனுமதிக்கிறது. இந்தக் குறியீட்டை ரயில், மெட்ரோ, டிராம் மற்றும் பேருந்து பயணங்களுக்குப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.