துபாய்வாசிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த துபாய் ரன் 2026-க்கான பதிவு இப்போது திறக்கப்பட்டுள்ளது. ஆம், வருகின்ற நவம்பர் 22 அன்று ஷேக் சையத் சாலை ஒரு பிரம்மாண்டமான ஓடுதளமாக மாறவிருக்கிறது. துபாய் ஃபிட்னஸ் சேலஞ்சின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த நிகழ்வு, பங்கேற்பாளர்களுக்கு 5 கி.மீ மற்றும் 10 கி.மீ ஆகிய இரண்டு வழித்தடங்களில் நகரத்தின் முக்கிய இடங்களை அருகிலிருந்து அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும்.
இந்நிகழ்வு, ஜாக்கிங் அல்லது நடைப்பயிற்சி என அனைத்து உடற்தகுதி நிலைகளைக் கொண்ட பங்கேற்பாளர்களும் தங்களுக்கு ஏற்ற வேகத்தில் இதில் பங்கேற்கலாம். இந்தப் போட்டி காலை 6.30 மணிக்குத் தொடங்குகிறது, ஆனால் பங்கேற்பாளர்கள் தாங்கள் பதிவு செய்துள்ள வருகை நேரத்திற்குள் வந்தடைய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகை நேரம் அதிகாலை 4 மணி முதல் தொடங்கும். பாதுகாப்பு கருதி ஒவ்வொரு நேரத்திற்கும் வரையறுக்கப்பட்ட இடங்களே உள்ளன, மேலும் தொடக்கக் கோடு காலை 8 மணிக்கு மூடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
துபாய் ரன் 2026: வழித்தடங்கள்
பங்கேற்பாளர்கள் இரண்டு வழித்தடங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்:
- 5 கி.மீ. வழித்தடம்: குடும்பங்கள் மற்றும் தொடக்கநிலையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த வழித்தடம், அருங்காட்சியகத்திற்கு (Museum of the Future) அருகில் உள்ள ஷேக் சையத் சாலையில் தொடங்கி, புர்ஜ் கலிஃபா மற்றும் துபாய் ஓபராவைக் கடந்து, துபாய் மால் அருகே முடிவடைகிறது.
- 10 கி.மீ. வழித்தடம்: ஒரு நீண்ட சவாலை வழங்கும் இந்த வழித்தடம், எதிர்கால அருங்காட்சியகத்திற்கு அருகில் தொடங்கி, துபாய் கானல் பாலத்தைக் கடந்து, ஷேக் சையத் சாலையை ஒட்டி வளைந்து சென்று, DIFC கேட் அருகே முடிவடைகிறது.
பிப் (bib) பெறுதல்: தேதிகள் மற்றும் நேரங்கள்
மேலும், இதில் பதிவு செய்த பங்கேற்பாளர்கள், நவம்பர் 9 முதல் 21-ஆம் தேதிக்குள், ஜபீல் பூங்காவில் உள்ள துபாய் முனிசிபாலிட்டி 30×30 ஃபிட்னஸ் வில்லேஜில் இருந்து தங்களின் பிப் மற்றும் டி-ஷர்ட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றுக்கொள்ளும் நேரங்கள்:
- திங்கள் முதல் வியாழன் வரை: மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை
- வெள்ளி: மதியம் 12 மணி முதல் இரவு 11 மணி வரை
- சனி மற்றும் ஞாயிறு: காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை
அதுமட்டுமின்றி, செல்லுபடியாகும் பதிவு QR குறியீட்டைக் காண்பிப்பதன் மூலம், வேறொருவர் உங்கள் சார்பாக உங்கள் பிப்பைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிப் இல்லாத பங்கேற்பாளர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, உங்கள் பிப்பைத் தொலைத்துவிட்டால், நீங்கள் மீண்டும் பதிவுசெய்து புதிய ஒன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
துபாய் ரன்: மெட்ரோ, பார்க்கிங் மற்றும் டாக்சிகள்
இந்நிகழ்விற்கு வாகனத்தில் வரும் பங்கேற்பாளர்கள், 10 கி.மீ. வழித்தடத்திற்கு துபாய் உலக வர்த்தக மைய பார்க்கிங் இடங்களிலும் அல்லது 5 கி.மீ. வழித்தடத்திற்கு துபாய் மாலிலும் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, தொடக்கக் கோட்டை அடைய துபாய் மெட்ரோவைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், அன்று தாமதங்களையும் வரிசைகளையும் தவிர்க்க, உங்கள் நோல் அட்டையில் குறைந்தபட்சம் 15 திர்ஹாம்ஸ் இருப்பு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- 5 கி.மீ. வழித்தடத்திற்கு: வேர்ல்ட் ட்ரேட் சென்டர் மெட்ரோ நிலையத்தில் இறங்கவும்.
- 10 கி.மீ. வழித்தடத்திற்கு: எமிரேட்ஸ் டவர்ஸ் மெட்ரோ நிலையத்தில் இறங்கவும்.
துபாய் ரன்னில் பங்கேற்க வருபவர்களுக்கு டாக்ஸிகளும் ஒரு தேர்வாகும். ஏனெனில், தொடக்கக் கோடுகளுக்கு அருகில், இறக்கிவிடவும் ஏற்றிக்கொள்ளவும் என பிரத்யேக இடங்கள் உள்ளன.
முன்பு வெளியான அறிவிப்பின் படி, புர்ஜ் கலிஃபா/துபாய் மால் மெட்ரோ நிலையத்தில் உள்ள பேருந்து மற்றும் டாக்சி சேவைச் சாலை 2026 ஆம் ஆண்டின் இறுதி வரை மூடப்பட்டிருக்கும். எனவே, துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் இணையதளம், பங்கேற்பாளர்கள் பிசினஸ் பே மெட்ரோ நிலையத்திற்கு மாற்று வழியைப் பயன்படுத்த அறிவுறுத்துகிறது.
துபாய் ரன் 2026: நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்
- இது ஒரு பந்தயம் அல்ல: துபாய் ரன் அனைவருக்கும் திறந்திருக்கும், மேலும் பங்கேற்பாளர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பாதையைத் தங்கள் சொந்த வேகத்தில் முடிக்கலாம்.
- குழந்தைகள்: பெற்றோர்களும் சட்டப்பூர்வ பாதுகாவலர்களும் மூன்று குழந்தைகள் வரை பதிவு செய்யலாம். 18 வயதுக்குட்பட்ட பங்கேற்பாளர்கள் ஒரு பெரியவருடன் வர வேண்டும்.
- பைகள்: இந்நிகழ்வில் பெரிய பைகள் அனுமதிக்கப்படாது. பங்கேற்பாளர்கள் அத்தியாவசியமான தனிப்பட்ட பொருட்களை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும்.
- குழந்தை வண்டிகள்: 5 கி.மீ பாதையில் குழந்தை வண்டிகள் அனுமதிக்கப்படுகின்றன.
- செல்லப்பிராணிகள்: செல்லப்பிராணிகள் அனுமதிக்கப்படாது.
- மருத்துவ உதவி: இரண்டு பாதைகளிலும் மருத்துவ உதவி மற்றும் தண்ணீர் நிலையங்கள் கிடைக்கும். உதவி தேவைப்படும் பங்கேற்பாளர்கள் அருகிலுள்ள துபாய் ரன் மார்ஷல் அல்லது மருத்துவரைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது 901 என்ற எண்ணை அழைக்கலாம்.
- கழிப்பறைகள்: அனைவருக்கும் தொடக்க மற்றும் நிறைவுப் புள்ளிகளில் குறைந்த அளவிலான கழிப்பறை வசதிகள் கிடைக்கும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel