ஐக்கிய அரபு அமீரகம் தனது 55-வது ‘ஈத் அல் இத்திஹாத்’ (தேசிய தின) கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வரும் நிலையில், நாடு முழுவதும் வண்ணமயமான வாகன அலங்காரங்கள், கொண்டாட்டக் கூட்டங்கள், வாணவேடிக்கைகள் என உற்சாகமான சூழல் நிலவுகிறது. ஷேக் சையத் ஃபெஸ்டிவலின் கண்கவர் காட்சிகள் முதல் குளோபல் வில்லேஜில் நடைபெறும் சிறப்புக் கொண்டாட்டங்கள் வரை, குடியிருப்பாளர்களும் பார்வையாளர்களும் இந்த நிகழ்வைக் கொண்டாட ஏராளமான வழிகள் உள்ளன. இருப்பினும், இந்தக் கொண்டாட்டங்களின் நடுவே, அனைத்து வகையான செயல்பாடுகளுக்கும் அனுமதி இல்லை என்பதை அதிகாரிகள் நினைவூட்டுகின்றனர்.
அனுமதியற்ற வாகன ஊர்வலங்கள், அதிக சத்தத்துடன் இசை ஒலித்தல், ஸ்ப்ரே பெயிண்டுகளைப் பயன்படுத்துதல் மற்றும் வாகனங்களை முறையற்ற வகையில் அலங்கரித்தல் போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். கொண்டாட்டங்கள் பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் நடைபெறுவதை உறுதிசெய்ய, உள்துறை அமைச்சகம் 13 விதிகளை வகுத்துள்ளது. மேலும், அவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
குடியிருப்பாளர்கள் பின்பற்ற வேண்டிய 13 விதிகள் இதோ:
வாகன அலங்காரங்கள் மற்றும் மாற்றங்கள்
- அங்கீகரிக்கப்பட்ட அலங்காரங்களை மட்டுமே பயன்படுத்தவும்: அதிகாரப்பூர்வ ஈத் அல் எத்திஹாத் வழிகாட்டுதல்களின் கீழ் அனுமதிக்கப்பட்டாலன்றி, ஸ்டிக்கர்கள், அடையாளங்கள் மற்றும் சின்னங்களை வாகனங்களில் வைக்கக்கூடாது.
- அங்கீகரிக்கப்பட்ட கொடிகள் மற்றும் சின்னங்களை மட்டுமே காட்சிப்படுத்தவும்: வழிகாட்டுதல்களின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஐக்கிய அரபு அமீரகக் கொடி மற்றும் சின்னங்களை மட்டுமே காட்சிப்படுத்த வேண்டும். அங்கீகரிக்கப்படாத கொடிகள் மற்றும் ஸ்டிக்கர்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
- வாகனப் பதிவு எண்களைத் தெளிவாகத் தெரியும்படி வைக்கவும்: ஓட்டுநர்கள் முன் அல்லது பின் வாகனப் பதிவு எண்களை மறைக்கவோ, தங்கள் வாகனத்தின் நிறத்தை மாற்றவோ அல்லது தற்போதுள்ள விதிமுறைகளை மீறும் ஜன்னல் வண்ணப்பூச்சுகளைப் பயன்படுத்தவோ கூடாது.
- பார்வையைத் தடுக்க வேண்டாம்: ஓட்டுநரின் பார்வையைத் தடுக்கும் வகையில், ஸ்டிக்கர்களும் அலங்காரங்களும் முன்பக்கக் கண்ணாடிகளையோ அல்லது பக்கவாட்டுக் கண்ணாடிகளையோ மறைக்கக் கூடாது.
சாலைப் பாதுகாப்பு மற்றும் பொதுக் கூட்டங்கள்
- போக்குவரத்து விதிகளைப் பின்பற்றவும்: வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும், மேலும் பொதுப் பாதுகாப்பைப் பேணுவதற்காக அவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும்.
- அனுமதியற்ற ஊர்வலங்களைத் தவிர்க்கவும்: திட்டமிடப்படாத வாகனக் கூட்டங்களும் அனுமதியற்ற ஊர்வலங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான கொண்டாட்டங்கள், அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, நியமிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நடைபெற வேண்டும்.
- சாலைகளை மறிக்க வேண்டாம்: வாகன ஓட்டிகள், மற்ற வாகனங்கள் மற்றும் சாலைப் பயனாளிகளின் நடமாட்டத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போக்குவரத்தைத் தடுக்கவோ அல்லது சாலைகளை மறிக்கவோ கூடாது.
- பயணிகள் வரம்புகளைப் பின்பற்றவும்: ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையை மீறக்கூடாது.
- நகரும் வாகனங்களுக்கு வெளியே எட்டிப்பார்க்க கூடாது: வாகனம் இயங்கும்போது பயணிகள் ஜன்னல்கள் அல்லது சன்ரூஃப்களுக்கு வெளியே எட்டிப் பார்க்கக்கூடாது.
இரைச்சல், ஸ்ப்ரே கேன்கள் மற்றும் ஆடைகள்
- ஸ்ப்ரே கேன்களைப் பயன்படுத்த வேண்டாம்: வாகனங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் எந்த வகையான ஸ்ப்ரே கேன்களையும் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடு ஓட்டுநர்கள், பயணிகள் மற்றும் பாதசாரிகளுக்குப் பொருந்தும்.
- அதிக சத்தம் வேண்டாம்: குடியிருப்பாளர்கள் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் அளவுக்கு அதிக ஒலியளவில் இசை அல்லது பிற ஒலிகளை எழுப்புவதைத் தவிர்க்க வேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட ஆடைகள் மற்றும் ஸ்கார்ஃப்களை அணியுங்கள்: அங்கீகரிக்கப்படாத ஸ்கார்ஃப்கள் அனுமதிக்கப்படாது. ஆடைகள் மற்றும் சின்னங்கள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஈத் அல் எத்திஹாத் வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும்.
- பொது ஒழுங்கைப் பராமரிக்கவும்: குடியிருப்பாளர்கள் கொண்டாட்டங்களை நாகரிகமாக வைத்திருக்க வேண்டும் மற்றும் ஓட்டுநர்கள், பயணிகள், பாதசாரிகள் அல்லது பிற சாலைப் பயனாளிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் நடத்தைகளைத் தவிர்க்க வேண்டும்.
அதுமட்டுமில்லாமல், தேவையான அனுமதிகள் இல்லாமல் தேசிய தின அணிவகுப்புகளில் பங்கேற்க வேண்டாம் என ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கு முன்னரே எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் 54-வது ஈத் அல்-திஹாத் கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, செல்லுபடியாகும் அனுமதி இல்லாமல் அணிவகுப்புகளிலோ அல்லது கூட்டங்களிலோ கலந்துகொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது என ஷார்ஜா காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு நினைவூட்டியது.
அதன் படி, குறிப்பிட்ட அனுமதி இல்லாமல் பங்கேற்கும் அல்லது அங்கீகரிக்கப்படாத நேரத்திலோ அல்லது இடத்திலோ கலந்துகொள்ளும் ஓட்டுநர்கள் பின்வரும் தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும்:
- 500 திர்ஹம்ஸ் அபராதம்
- அவர்களின் ஓட்டுநர் உரிமத்தில் நான்கு கருப்புப் புள்ளிகள்
- 15 நாட்களுக்கு வாகனம் பறிமுதல்
ஒட்டுமொத்தத்தில், அனைவருக்கும் பாதுகாப்பான ஈத் அல்-திஹாத் கொண்டாட்டத்தை உறுதிசெய்ய, குடியிருப்பாளர்கள் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, பொறுப்புடன் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel