துபாயின் முக்கிய அடையாளமான ஷேக் சையத் சாலை (Sheikh Zayed Road), இன்று (நவம்பர் 22) வழக்கமான வாகனப் போக்குவரத்துமின்றி ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களின் உற்சாகக் கடலாக மாறியது. துபாய் ஃபிட்னஸ் சேலன்ஜ் (Dubai Fitness Challenge) நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற எட்டாவது ‘துபாய் ரன் 2026’ (Dubai Run 2026) நிகழ்ச்சி இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது.
வாகனங்களுக்குத் தடை; பாதசாரிகளுக்கு அனுமதி
வழக்கமாக கார்கள் மற்றும் வாகனங்களால் பரபரப்பாக இயங்கும் ஷேக் சையத் சாலை, இந்த மெகா ஓட்ட நிகழ்ச்சிக்காக முற்றிலும் மூடப்பட்டது. 5 கிலோமீட்டர் மற்றும் 10 கிலோமீட்டர் என இருவேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த ஓட்டத்தில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அதிகாலையிலேயே ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
அத்துடன் நிகழ்ச்சிக்காக துபாய் மெட்ரோ அதிகாலை 3 மணி முதலே இயக்கப்பட்டு, பங்கேற்பாளர்கள் எளிதில் வந்து சேர வழிவகை செய்யப்பட்டது.
வானில் சாகசங்கள் மற்றும் வண்ணமயமான உடைகள்
இந்த ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட பலரும் வெறும் விளையாட்டு உடைகளுடன் நிற்காமல், தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக விதவிதமான காஸ்ட்யூம்களில் கலக்கினர். பவர் ரேஞ்சர்ஸ், சாண்டா கிளாஸ், சூப்பர் ஹீரோக்கள் மற்றும் பிரத்யேகமான வடிவமைப்பு உடைகளை அணிந்து வந்தவர்கள் அனைவரையும் கவர்ந்தனர். சிறந்த உடைகளுக்கான 10,000 திர்ஹம்ஸ் பரிசுத் தொகைக்கான போட்டியும் இதில் இடம்பெற்றது.
ஓட்டப்பந்தய வீரர்களின் உற்சாகம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் வான்வெளியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘அல் ஃபுர்சான்’ (Al Fursan) விமானப் படைக்குழுவினரின் சாகச நிகழ்ச்சிகளும், பாரா கிளைடர்களின் வர்ணப் புகை உமிழ்வு சாகசங்களும் நிகழ்வுக்கு கூடுதல் மெருகூட்டின.
சாதனைப் படைத்த முதியவர்களும் குடும்பங்களும்
வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், 60 வயதிற்கும் மேற்பட்டவர்களும் வண்ணமயமான உடைகளுடன் கலந்துகொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர். ஷார்ஜாவில் இருந்து தங்களது இரண்டு வயது குழந்தையுடன் அதிகாலை 2 மணிக்கே வந்து கலந்துகொண்ட குடும்பத்தினரும் உண்டு.
பல ஆண்டுகளாக துபாயில் வசித்து வந்தாலும், ஷேக் சையத் சாலையில் கார்கள் இல்லாமல் ஓடும் இந்த அரிய வாய்ப்பை முதல்முறையாக அனுபவித்ததாக பல பங்கேற்பாளர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர். நிகழ்ச்சி நிறைவடைந்ததும், துபாய் காவல்துறை மற்றும் ஏற்பாட்டுக் குழுவினர் சாலையைச் சீரமைத்து மீண்டும் போக்குவரத்துக்காகத் திறக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.