சவூதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதியத்தின் (PIF) தலைமையகம் அமைந்துள்ள ரியாத்தின் பைனான்சியல் டிஸ்ட்ரிக்டில் உள்ள கட்டிடம் ஒன்று தாக்குதலுக்கு உள்ளானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சவூதி தலைநகரில் புதிய பாதுகாப்பு கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தை “கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்” என்று வர்ணித்துள்ள சவூதி தலைமையிலான கூட்டணி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
தலைநகரின் வணிக மாவட்டத்தில் அமைந்துள்ள கட்டிடம், ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாகத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சவூதி சிவில் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை ரியாத்தின் நிதி மாவட்டத்தில் உள்ள கட்டிடம் ஒன்று ஹவுதி ஆயுதக் குழுவினரின் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கானதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் இரண்டு சவூதி குடிமக்கள், சவூதியில் வசிக்கும் இரண்டு இந்தியர்கள், மூன்று நேபாள நாட்டவர்கள் மற்றும் நான்கு எகிப்து நாட்டவர்கள் என மொத்தம் 11 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல் தெரிவைக்கப்பட்டுள்ளது.
மேலும், தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து சிவில் பாதுகாப்புத் துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவங்களைக் கையாள்வதற்காக ஏற்கெனவே வகுக்கப்பட்டுள்ள அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதுடன், பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, தாக்குதலுக்கு உள்ளான கட்டிடத்தின் பெயர், கட்டிடத்திற்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு மற்றும் காயமடைந்தவர்களின் தற்போதைய உடல்நிலை குறித்த விரிவான தகவல்கள் வழங்கப்பட்ட அறிக்கையில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel