ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாட்டவர்கள் எமிராட்டி ஸ்பான்சர் இல்லாமல் தொழில் தொடங்கலாம் என்று அமீரக அரசு கடந்த ஆண்டு அறிவித்திருந்த சட்டமானது தற்போது வரும் 2021 ஜூன் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாக அமீரக அரசு கடந்த புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த புதிய சட்டம் அமீரகத்தில் தொழில்புரியும் முதலீட்டாளர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் அவர்கள் நிறுவனங்களின் முழு உரிமையை அதாவது 100 சதவீத ஓனர்ஷிப்பை அனுமதிக்கும் என்றும் அமீரக அரசு தெரிவித்துள்ளது.
அமீரகத்தின் பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் டூக் இதனை தனது சமூக வலைதள பக்கம் ஒன்றில் இந்த புதிய சட்டம் அமலுக்கு வரவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் அந்த செய்தியில் இது குறித்து கூறுகையில், “அரசு வெளியிட்டிருக்கும் சமீபத்திய முடிவு ஒரு புதிய படியாகும், இது பொருளாதாரத்தை ஆதரிப்பதற்கும் எதிர்காலத்திற்கான அதன் தயார்நிலையை மேம்படுத்துவதற்கும் ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது” என்றுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை வெளிநாட்டவர்கள் தங்களின் நிறுவனங்களைத் துவங்க இதுவரையிலும் அமீரக நாட்டை சேர்ந்த ஒருவரின் (எமிராட்டி) ஸ்பான்சர் தேவை என்பது கட்டாயம் ஆகும். தற்போது இந்த சட்டம் திருத்தும் செய்யப்பட்டு உள்ளூர் குடிமக்களின் ஸ்பான்சர் இல்லாமலேயே அமீரகத்தில் தங்களின் நிறுவனங்களை முழுமையாக செயல்படுத்தலாம் என்பது கவனிக்கத்தக்கது. இந்த ஆணையானது ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் உத்தரவின் பேரில் பிறப்பிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கள் நிறுவனத்தின் கிளைகளை திறக்க விரும்பும் நிறுவனங்களும் எமிராட்டி ஸ்பான்சர் இல்லாமல் தொழில் தொடங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. முதலீடுகள் மற்றும் திட்டங்களுக்கான இடமாக பிராந்திய மற்றும் உலகளாவிய ரீதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் நிலையை மேம்படுத்துவதற்கான ஒரு படியாக இந்த புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்த சீர்திருத்தங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் அந்நிய முதலீட்டை பெருமளவில் ஈர்க்கும் என்றும் ஏற்கனவே அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த மாதம், ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகம், வர்த்தக நிறுவனச் சட்டத்தில் மேலும் 10 புதிய துறைகளைச் சேர்க்க ஒரு புதிய சட்டத்தை அரசு உருவாக்கி வருவதாகவும், இந்த சட்டம் நாட்டில் உள்ள நிறுவனங்களின் (ஆஃப்ஷோர் நிறுவனங்கள் தவிர) 100 சதவீத வெளிநாட்டு உரிமையை அனுமதிக்கும் என்றும் கூறியிருந்தது.
இந்த நடவடிக்கைகள் அமீரகத்தில் வணிகம் செய்வதற்கான செலவுகளைக் குறைத்து, வணிகம் செய்வதை எளிதாக்கும் என்றும், அவ்வாறு தொடங்கப்படும் ஒரு நிறுவனத்தின் தலைவராக (chairman) எமிராட்டி இருப்பது கட்டாயமில்லை என்றும், இயக்குநர்கள் குழுவிலும் (board of directors) எமிராட்டி பெரும்பான்மை இருக்க வேண்டியதில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது வரையிலும், 2015 ஆம் ஆண்டின் வணிக நிறுவனங்கள் சட்டம் 2 இன் கீழ், வெளிநாட்டு பங்குதாரர்கள் ஒரு நிறுவனத்தின் பங்கில் அதிகபட்சமாக 49 சதவீதத்தை வைத்திருக்க முடியும் என்பதும் எமிராட்டி தனிநபர் அல்லது உள்ளூர் நிறுவனம் மீதமுள்ள 51 சதவீத பங்கை வைத்திருக்க முடியும் என்பதும் அமலில் இருந்து வந்தது.
இருப்பினும், வெளிநாட்டு நேரடி முதலீட்டுச் சட்டம், 2018 ஆம் ஆண்டின் 19-ம் இலக்க ஆணையின் கீழ், வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர் உரிமையின் மீதான கட்டுப்பாடுகளை எளிதாக்கும் திட்டங்களை அமீரக அரசு ஏற்கனவே வகுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த புதிய ஆணையின் மூலம் வெளிநாட்டை சேர்ந்த தொழில்முனைவோர்களுக்கு ஒரு சிறந்த வழியை அமீரக அரசு அமைத்து கொடுத்துள்ளது.