ADVERTISEMENT

அமீரகத்தில் ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக பதிவாகி இருக்கும் நிலநடுக்கம்..!!

Published: 27 May 2021, 9:21 AM |
Updated: 27 May 2021, 9:34 AM |
Posted By: admin

ஃபுஜைராவின் டிப்பாவில் ரிக்டர் அளவில் 2.8 ரிக்டர் அளவிலான சிறிய நிலநடுக்கம் புதன்கிழமை இரவு 8.34 மணிக்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த வாரம் ஃபுஜைராவில் உணரப்பட்ட மூன்றாவது சிறிய நிலநடுக்கம் இதுவாகும். திங்களன்று, இதே பகுதியில் இரண்டு சிறிய நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாக தேசிய வானிலை மையத்தின் தேசிய நில அதிர்வு வலையமைப்பு ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

முதலாம் நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவாகி அதிகாலை 4:54 மணிக்கும், ரிக்டர் அளவில் 2.3 ஆக பதிவாகிய  இரண்டாவது நிலநடுக்கம் காலை 7.24 மணிக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இருப்பினும், ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் இந்த நிலநடுக்கங்கள் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்றும், இதுபோன்ற சிறிய அளவிலான நடுக்கம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் நில அதிர்வு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

“கடந்த 10 ஆண்டுகளில் டிப்பா, மசாஃபி, கொர்ஃபக்கான் சிட்டி, ஃபுஜைரா சிட்டிக்கு எதிரே உள்ள ஓமான் கடல் மற்றும் கல்பாவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன” என்று தேசிய வானிலை மையத்தின் நில அதிர்வு இயக்குநர் காமிஸ் எல்ஷாம்ஸி கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அவர் மேலும் கூறுகையில், “பொதுவாக ஐக்கிய அரபு அமீரகத்தைத் தாக்கும் நிலநடுக்கம் 2 முதல் 5 வரையிலான அளவோடு ஒப்பீட்டளவில் சிறியது மற்றும் இந்த நிலநடுக்கங்களால் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. அதனால் இங்குள்ளவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை” என அவர் கூறியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் இப்பகுதியில் நில அதிர்வு நடவடிக்கைகளை கண்காணித்து வருவதன் மூலம், இந்த நிலநடுக்கங்கள் லேசானது முதல் மிதமானது வரை இருப்பதாகவும், இயற்கையான செயலாகக் கருதப்படும் இந்த நிலநடுக்கம் வருடத்தில் பல முறை ஏற்படக்கூடும் என்பதையும் வானிலை ஆய்வு மையம் விளக்கியுள்ளது.