ADVERTISEMENT

அமீரகத்தில் மரண தண்டனை விதித்த இந்தியரின் விடுதலைக்கு 1 கோடி ரூபாய் உதவி..!! லூலூ தலைவர் யூசுப் அலியின் மனிதாபிமான செயல்..!!

Published: 5 Jun 2021, 6:37 AM |
Updated: 5 Jun 2021, 6:46 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில், கடந்த 2012 ம் ஆண்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிறுவனைக் கொன்ற குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய நாட்டைச் சேர்ந்த பெக்ஸ் கிருஷ்ணன் என்ற பெயருடைய 45 வயதான நபர், தற்பொழுது அதிர்ஷ்டவசமாக விடுதலை செய்யப்பட்டு விரைவில் இந்தியாவிற்கு திரும்பவுள்ளார்.

ADVERTISEMENT

இவருக்கு லுலு குழுமத்தின் தலைவரான யூசுப் அலி M.A., சிறுவனின் குடும்பத்திற்கு கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் இழப்பீடு (blood money) செலுத்திய பின்னர் கேரளாவில் உள்ள தனது சொந்த ஊருக்குத் திரும்பத் தயாராகவுள்ளார்.

செப்டம்பர் 2012 இல் பெக்ஸ் கிருஷ்ணன் தனது காரை குழந்தைகள் குழுவில் மோதியதில் சூடான் நாட்டைச் சேர்ந்த சிறுவன் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவர் கொலை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து ஐக்கிய அரபு அமீரக உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அப்பகுதியைச் சேர்ந்த சிசிடிவி காட்சிகள் குற்றத்தை உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அப்போதிருந்து, பெக்ஸ் கிருஷ்ணனின் குடும்பத்தினரும் நண்பர்களும் அவர் விடுதலையைப் பெற கடுமையாக முயற்சித்துள்ளனர். பாதிக்கப்பட்டவரின் குடும்பம் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு வெளியேறி மீண்டும் சூடானுக்கு இடம் பெயர்ந்த காரணத்தால், மேற்கொண்டு எந்தவொரு விவாதத்திற்கும் அல்லது மன்னிப்புக்கும் வழியில்லாமல் போய்விட்டது.

பின்னர் கிருஷ்ணன் குடும்பத்தினர் யூசுப் அலியை அணுகியிருக்கின்றனர். அவர் வழக்கின் விவரங்களைப் பெற்று அனைத்து தரப்பினருடனும் தொடர்பு கொண்டார். இறுதியில் 2021 ஜனவரியில், சூடானில் பாதிக்கப்பட்டவரின் குடும்பமானது கிருஷ்ணனுக்கு மன்னிப்பு வழங்க ஒப்புக்கொண்டது.

ADVERTISEMENT

இதனையடுத்து, அந்த நபரின் விடுதலையைப் பெறுவதற்காக யூசுப் அலி நீதிமன்றத்தில் 500,000 திர்ஹாம் (தோராயமாக ஒரு கோடி ரூபாய்) இழப்பீடாக வழங்கினார் என்று லுலு குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதனைக் கேள்வியுற்ற கிருஷ்ணன் அபுதாபியில் உள்ள அல் வத்பா சிறையில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் என்னால் இதனை நம்ப முடிவில்லை எனக் கூறி மிகவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.

கிருஷ்ணன் கூறுகையில், “இது எனக்கு ஒரு மறுபிறப்பு. வெளி உலகத்தைப் பார்க்கும் நம்பிக்கையை நான் இழந்துவிட்டேன் என்றும், இனி எனக்கு விடுதலை இல்லை என்றும் நினைத்திருந்தேன். தற்பொழுது நடந்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. எனது குடும்பத்தினரிடம் செல்வதற்கு முன்பு ஒரு முறை யூசுப் அலியைப் பார்க்க வேண்டும் என்பதே எனது ஒரே ஆசை” என்று கூறியுள்ளார்.

இது குறித்து யூசுப் அலியிடம் கேட்டபோது, ​​கிருஷ்ணனை விடுவித்ததற்காகவும், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆட்சியாளர்கள் அளித்த தயவிற்காகவும் இறைவனுக்கு நன்றி என்று தெரிவித்திருக்கிறார். அத்துடன் பெக்ஸ் கிருஷ்ணனுக்கு மகிழ்ச்சியான மற்றும் அமைதியான வாழ்க்கைக்கான தனது வாழ்ததுக்களையும் தெரிவித்துள்ளார்.

பெக்ஸ் கிருஷ்ணனின் விடுதலை தொடர்பான அனைத்து சட்ட நடைமுறைகளும் ஜூன் 3 ஆம் தேதி நிறைவடைந்தன என்றும் அவர் விரைவில் கேரளாவிலுள்ள தனது சொந்த ஊருக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் லுலு குழுமத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.