ADVERTISEMENT

UAE: எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்தால் “எக்ஸ்போ 2020 துபாய்” செல்ல ஒரு நாள் பாஸ் இலவசம்..!!

Published: 31 Jul 2021, 2:45 AM |
Updated: 31 Jul 2021, 2:47 AM |
Posted By: admin

உலகமே ஆவலுடன் உற்றுநோக்கியுள்ள துபாயின் “எக்ஸ்போ 2020 துபாய்” தொடங்க இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், துபாயின் முதன்மை விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அதன் பயணிகளுக்கு உலகின் மிகச்சிறந்த இந்த நிகழ்வின் ஒரு நாள் இலவச பாஸ்களை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அக்டோபர் 1, 2021 முதல் மார்ச் 31, 2022 க்கு இடையில் துபாய்க்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்துடன் பறக்கும் பயணிகள் அனைவரும் எக்ஸ்போ 2020 துபாய்க்கு ஒரு பாஸ் பெறுவார்கள் என்றும், மேலும் வேறொரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு துபாய் வழியாக பறக்கும் பயணிகளில் காத்திருப்பு நேரம் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக இருக்கும் பயணிகளும் இந்த வாய்ப்பைப் பெறலாம் என்றும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து எமிரேட்ஸ் கூறியிருப்பதாவது, “நீங்கள் எங்களுடன் துபாய்க்கு, 1 அக்டோபர் 2021 முதல் 31 மார்ச் 2022 வரையிலான நாட்களில் பயணிக்கிறீர்கள் என்றால், உங்கள் முன்பதிவில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையில் ஒரு நாள் எக்ஸ்போ 2020 பாஸை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். நீங்கள் தேர்வு செய்யும் எந்த நாளிலும் எக்ஸ்போ 2020 தளத்திற்கு செல்ல உங்கள் டிக்கெட்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

“துபாய் வழியாக டிரான்சிட் விமானங்களில் பயணிக்கிறீர்களா..? துபாயில் உங்கள் காத்திருப்பு நேரம் ஆறு மணி நேரத்திற்கு மேல் இருந்தால், நீங்களும் இந்த இலவச எக்ஸ்போ 2020 க்கான ஒரு நாள் பாஸிற்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் பாஸை பெற்றுக்கொள்ள, பயண விபரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ளிட்டால், நாங்கள் உங்களுக்கு டிக்கெட்டுகளை மின்னஞ்சல் செய்வோம்” என்று கூறியுள்ளது.

மேலும், “உங்கள் விமானம் மாற்றப்பட்டால் அல்லது ரத்து செய்யப்பட்டால், உங்கள் ஒரு நாள் இலவச பாஸ் அதன் பின்னர் செல்லுபடியாகாது, எனவே உங்கள் புதிய விமான விவரங்களை உள்ளிட்டு மீண்டும் புதிய பாஸை கோரவும். இதற்கான முழு விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் காணவும்” என்றும் விமான நிறுவனம் அதன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

அக்டோபர் 21, 2021 முதல் தொடங்கவிருக்கும் இந்த ஆறு மாத கால மெகா நிகழ்வான எக்ஸ்போ 2020 துபாய்க்கான டிக்கெட்டுகள், நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாகவே அதாவது ஜூலை 18 முதலே உலகளவில் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.