ஐக்கிய அரபு அமீரகத்தின் 50 ஆவது ஆண்டை கொண்டாடும் விதமாக குளோபல் வில்லேஜ் அதன் ஒரு மாத காலத்திற்கு அமீரக தேசிய தின கொண்டாட்டங்களை புகைப்படம் எடுத்தல் போட்டியுடன் தொடங்கியுள்ளது. மேலும் இந்த புகைப்படம் எடுத்தல் போட்டியில் வெற்றியாளர்கள் 50,000 திர்ஹம் வரை பரிசாகவும் மற்றும் கோப்பையையும் வெல்ல முடியும் என்றும் குளோபல் வில்லேஜ் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
வரும் டிசம்பர் 2 ஆம் தேதியுடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு எமிரேட்கள் ஒன்றாக இணைந்து 50 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு ‘அமீரகத்தின் 50 வருட ஒற்றுமை’ எனும் நிகழ்வை கொண்டாடும் விதமாக குளோபல் வில்லேஜ், ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் சர்வதேச புகைப்பட விருது (HIPA) உடன் இணைந்து இன்று வியாழக்கிழமை இந்த புகைப்பட போட்டியை அறிவித்துள்ளது.
புகைப்படம் பிடிப்பதில் ஆர்வமுள்ள அனைவரும் இந்த போட்டியில் பங்குகொள்ளலாம் எனவும், இதற்கான என்ட்ரி வரும் டிசம்பர் 2 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய தினம் வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
போட்டியில் பங்குபெறும் பங்கேற்பாளர்கள் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் என்றும், மற்றும் தொழில்முறை கேமராக்களைப் பயன்படுத்தும் பங்கேற்பாளர்கள் குளோபல் வில்லேஜ் இணையதளத்தில் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து என்ட்ரிகளும் HIPA இணையதளத்தில் பதிவேற்றப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் முதல் பரிசு வெல்பவருக்கு 50,000 திர்ஹம் ரொக்கமும் தங்கக் கோப்பையும் வழங்கப்படும் எனவும், இரண்டாம் பரிசு வெல்பவருக்கு 26,000 திர்ஹம் ரொக்கம், வெள்ளிக் கோப்பைய மற்றும் குளோபல் வில்லேஜ் பேக் வழங்கப்படும் எனவும், மேலும் மூன்றாம் பரிசு வெல்பவருக்கு 26,000 திர்ஹம் ரொக்கமும் கண்ணாடி கோப்பையும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதனுடன் முதல் 10 ரன்னர்-அப் பரிசை வெல்பவர்களுக்கு, நுழைவுச் சீட்டுகள் மற்றும் வொண்டர் பாஸ் கார்டுகள் உட்பட குளோபல் வில்லேஜ் எக்ஸ்பீரியன்ஸ் பேக்கேஜ் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இப்போட்டியின் வெற்றியாளர்கள் அடுத்த வருடம் ஜனவரி 4, 2022 அன்று குளோபல் வில்லேஜ் மெயின் ஸ்டேஜில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் அறிவிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளோபல் வில்லேஜின் தலைமை நிர்வாக அதிகாரி படேர் அன்வாஹி இப்போட்டி குறித்து தெரிவிக்கையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் 50 வருட ஒற்றுமை மனப்பான்மையின் வலிமையையும் அழகையும் குளோபல் வில்லேஜ் கொண்டாடுகிறது என்று கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், “பன்முக கலாச்சாரம், உள்ளடக்கம் மற்றும் திறந்த மனப்பான்மை ஆகிய மூன்று தீமை அடிப்படையாக கொண்ட இந்த தனித்துவமான புகைப்படப் போட்டிக்காக HIPA உடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். போட்டிக்கான நடுவர் குழுவினர் பல்வேறு கலாச்சாரங்கள் ஒன்றாக குளோபல் வில்லேஜில் சேரும்போது உருவாகும் அதிசயத்தை விளக்கும் வலுவான கதையை வெளிப்படுத்தும் சிறந்த புகைப்படங்களை தேர்வு செய்வார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளுக்கான புகைப்பட போட்டி..
பெரியவர்களை தவிர 18 வயதிற்குட்பட்ட புகைப்படக் கலைஞர்களுக்கும் இப்போட்டியில் பங்குபெறும் வாய்ப்பையும் குளோபல் வில்லேஜ் அறிவித்துள்ளது. 18 வயதிற்குட்பட்ட புகைப்படக் கலைஞர்கள் தங்களின் சொந்த சமூக ஊடக பக்கத்தின் மூலம் இப்போட்டியில் பங்கேற்கலாம் எனவும் குளோபல் வில்லேஜ் தெரிவித்துள்ளது.
இப்போட்டியில் பங்குபெற விரும்பும் இளம் புகைப்படக் கலைஞர்கள் நவம்பர் 3 முதல் நவம்பர் 30 ம் தேதி வரையிலான நாட்களுக்கு இடையில் குளோபல் வில்லேஜில் தாங்கள் எடுக்கும் 50 வருட ஒற்றுமையை விளக்கும் படங்களை #GVWOW மற்றும் #Together என்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி இன்ஸ்டாகிராமில் பதிவேற்ற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான போட்டியில் வெற்றிபெறும் வெற்றியாளர்கள் டிசம்பர் 2 ஆம் தேதி அறிவிக்கப்படுவார்கள் எனவும் குளோபல் வில்லேஜ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.