ADVERTISEMENT

துபாய்: தேரா தீவிற்கு செல்ல இலவச அப்ரா படகு பயணம்.. துபாயின் அழகை இலவசமாய் படகில் கண்டுகளிக்க வாய்ப்பு..!!

Published: 1 Mar 2022, 6:04 PM |
Updated: 1 Mar 2022, 6:13 PM |
Posted By: admin

துபாயின் தேரா தீவில் (Deira Island) அமைந்துள்ள வாட்டர்ஃபிரண்ட் மார்க்கெட் பகுதியான சூக் அல் மர்ஃபாவில் (Souk Al Marfa) ஒரு புதிய மரைன் ஸ்டேஷன் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த பகுதிக்கு செல்லும் பார்வையாளர்கள் அப்ரா (Abra) படகில் முதல் ஐந்து மாதங்களுக்கு இலவசமாக பயணம் செல்லும் வாய்ப்பும் வழங்கப்பட்டுளளது. துபாயின் மிகப்பெரிய பிராபர்ட்டி டெவெலப்பரான நக்கீல் மற்றும் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இனைந்து இந்த முயற்சியை தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ள தேரா தீவின் சூக் அல் மர்ஃபாவிற்கு இரண்டு வழித்தடங்களில் இருந்து கடல் வழி பயணம் இயக்கப்படவுள்ளது. அதில் ஒரு வழித்தடம் துபாயின் பழைய சூக்கான தேராவின் பழைய சூக்கிலிருந்து இயக்கப்படும். இந்த வழித்தடத்தில் இயங்கவுள்ள 25 நிமிட படகு பயணமானது வார நாட்களில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் (வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு) காலை 10 மணி முதல் 12 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பயன்பாட்டில் இருக்கும்.

அதே போன்று சூக் அல் மர்ஃபாவிற்கு செல்லும் மற்றொரு வழித்தடமானது அல் குபைபாவிலிருந்து இயக்கப்படும். இந்த வழித்தடத்தில் இயங்கவுள்ள 20 நிமிட ஃபெர்ரி பயணமானது வார இறுதி நாட்களில் (வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு) மட்டும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பயன்பாட்டில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த வழித்தடங்களில் செல்லும் அப்ரா மற்றும் ஃபெர்ரி படகு பயணங்கள், தேரா கார்னிச், தேரா ஓல்ட் சூக், துபாய் க்ரீக் மற்றும் கோல்ட் சூக் ஆகியவற்றின் காட்சிகளை பார்வையாளர்களுக்கு வழங்குவதுடன் துபாயின் பழமையான மற்றும் மிகவும் பாரம்பரியமான வர்த்தக மையத்தை நகரின் புதிய தீவுடனும் இணைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூக் அல் மர்ஃபாவின் பொது மேலாளர் முஆத் அப்துல்காதர் அல்ரைஸ் கூறுகையில், “புதிய அப்ரா மற்றும் ஃபெர்ரி படகு சேவையானது, உள்ளூர்வாசிகள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் பார்வையாளர்கள் எங்களின் புதிய சில்லறை விற்பனை இலக்கை அடைய புதிய மற்றும் மறக்கமுடியாத வழியைக் கொண்டு வரும்” என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த கடல் வழி போக்குவரத்து குறித்து RTA வின் பொதுப் போக்குவரத்து ஏஜென்சியின் தலைமைச் செயல் அதிகாரி அஹ்மத் பஹ்ரோசியன் கூறுகையில், “இந்த போக்குவரத்து முறையானது சூக் அல் மர்ஃபாவை எளிதான மற்றும் தடையற்ற வழியில் அணுகுவதற்கான ஒரு அற்புதமான புதிய வழியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

துபாயின் தேரா மாவட்டத்தை ஒட்டியுள்ள 15.3 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த புதிய தீவானது, துபாயின் எல்லையில் 40 கிமீ தூரத்தையும், துபாயின் கடற்கரை பகுதிகளில் 21 கிமீ தூரத்தையும் அதிகரித்திருக்கிறது. மேலும் இங்கு தரைவிரிப்புகள், விளக்குகள், மசாலா பொருட்கள், ஃபேஷன், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் 900க்கும் மேற்பட்ட கடைகள் இருப்பதாகவும், மேலும் 200 கடைகள் விரைவில் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.