ADVERTISEMENT

துபாய் வரும் தமிழக முதல்வருக்கு பாராட்டு விழா ஏற்பாடு..!! வெளிநாடு வாழ் தமிழர் இந்திய சங்கம் முடிவு…!!

Published: 12 Mar 2022, 1:33 PM |
Updated: 12 Mar 2022, 1:42 PM |
Posted By: admin

துபாயில் கடந்த ஆறு மாத காலமாக நடைபெற்று வரும் உலகின் மிக பிரம்மாண்ட கண்காட்சியான எக்ஸ்போ இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. அதில் இந்த மாதம் எக்ஸ்போவில் உள்ள இந்தியன் பெவிலியனில் தமிழக அரசின் சார்பாக நடைபெறவுள்ள நிகழ்வுகளை முன்னிட்டு தமிழக முதல்வர் 26, 27 ஆகிய தேதிகளில் கலந்து கொள்வதற்காக துபாய் பயணிக்கவுள்ளார்.

ADVERTISEMENT

முதல்வரின் துபாய் பயணத்தை முன்னிட்டு அவரை வரவேற்பதற்காக வெளிநாடு வாழ் தமிழர் இந்திய சங்கம் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது. வெளிநாடு வாழ் தமிழர் இந்திய சங்கத்தின் தலைவர் S.S. மீரான் தலைமையில் இதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதில் “நம்மில் ஒருவர்” என்ற தலைப்பில் பாராட்டு விழா ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்களுக்கு அனுமதி படிவம் அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இதற்கு முன்னதாக கேரளாவின் முதலமைச்சரான பினராயி விஜயன் துபாய் எக்ஸ்போவிற்கு வருகை தந்திருந்தார். அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களில் அதிக எண்ணிக்கையில் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களே இருப்பதால் இது ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்பட்டது. மேலும் இவரை வரவேற்று துபாய் ஆட்சியாளர் மலையாளத்தில் ட்வீட் செய்ததும் அதற்கு பதிலளிக்கும் விதமாக கேரள முதல்வர் அரபு மொழியில் ட்வீட் செய்ததும் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது.

அதேபோல் தற்பொழுது தமிழக முதல்வர் அமீரகத்திற்கு வருகை புரிந்தால் அமீரகம், தமிழகம் இடையேயான பொருளாதார வளர்ச்சி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழக முதல்வரின் வருகையின் போது தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான ஒரு சில ஒப்பந்தங்கள் துபாயில் கையெழுத்தாகவுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு அக்டோபர் 1 முதல் துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ 2020 ஆனது இந்த மாதம் 31 ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆறு மாத காலம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த எக்ஸ்போவில், மார்ச் இறுதியில் தமிழக முதல்வர் வருவதையொட்டி இதுவே இந்திய பெவிலியனின் கடைசி முக்கிய நிகழ்வாக இருக்கும் எனவும் கருதப்படுகிறது.