ஷார்ஜா காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறையானது போலித் தங்கத்தை அசல் தங்கம் என மக்களுக்கு விற்பனை செய்து விநியோகிப்பதில் நிபுணத்துவம் பெற்ற ஆசியாவை சேர்ந்த 12 நபர்கள் கொண்ட கும்பலைக் கைது செய்துள்ளது.
அசல் தங்கம் என நினைத்து போலி தங்கத்தை வாங்கி ஏமாற்றப்பட்டதாக குடியிருப்பாளர்களிடமிருந்து பல புகார்களைப் பெற்ற பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஷார்ஜா காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் கர்னல் உமர் அகமது அபு அல்-ஸூத் கூறுகையில், அடையாளம் தெரியாத நபர்கள் போலித் தங்கம் வாங்கிக் கொண்டு குடியிருப்பாளர்களை ஏமாற்றியதாக அதிகாரிகளுக்குப் பல புகார்கள் கிடைத்ததாகவும் அதனைத் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி கர்னல் அபு அல்-ஸூத் கூறுகையில், “சந்தேகப்படும் நபர்கள் சந்தையில் மக்களுடன் தொடர்புகொள்வார்கள். ஆரம்பத்தில் மொபைல் போன்களை மலிவான விலையில் வழங்குவார்கள். பின் மக்களின் கவனத்தை அவர்கள் பெற்றவுடன், அவர்கள் வைத்திருக்கும் தங்கத் துண்டுகளைக் காட்டுவார்கள். மேலும் உண்மையான விற்பனை நிலையங்களில் தங்கத்தின் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுமாறும் குற்றவாளிகள் ஷாப்பிங் செய்பவர்களை ஊக்குவிப்பார்கள். இதனால் மக்கள் அவர்களை நம்பிவிடுவார்கள்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ”மக்கள் அவர்களை நம்பியதும், குறைந்த விலைக்கு தங்கம் விற்க ஒப்பந்தம் போடுவார்கள். இருப்பினும், வழங்கப்பட்ட பொருட்கள் போலியானது என்பதை, பாதிக்கப்பட்டவர்கள் பின்னரே உணருவார்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.
குற்றவாளிகளைக் கண்காணித்து, பின் அவர்களின் முறையையே பின்பற்றி, விசாரணைக் குழுக்கள் இந்த கும்பலைக் கைது செய்துள்ளனர். விசாரணையில், போலிப் பொருளை விநியோகித்தல், பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணித்தல், பேச்சுவார்த்தை நடத்தி முடித்தல் ஆகிய குற்றங்களை குற்றவாளிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
குற்றவாளிகள் வெளியிட்ட தகவலில், தங்கம் பூசப்பட்ட உலோகத் துண்டுகளை ஏற்றுமதி செய்ய நாட்டிற்கு வெளியே உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு போலி உலோகங்களைப் பெற்று, அதற்கு ஈடாக அவர்கள் வியாபாரிகளுக்கு பணத்தை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இந்த வழக்கு அரசு தரப்புக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து தங்கம் வாங்கும் போது மக்கள் எச்சிரக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து அவர் “அமீரகமானது உலகளவில் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கான சிறந்த மற்றும் மிகப்பெரிய வணிகச் சந்தைகளைக் கொண்டுள்ளது. பல்வேறு வகையான பொருட்கள் மற்றும் மாறுபட்ட விலைகளில் அனைத்தும் கிடைக்கின்றன. இருந்தபோதிலும் உரிமம் பெற்ற கடைகளை மட்டுமே பொதுமக்கள் கையாள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஷார்ஜா காவல்துறையின் ஸ்மார்ட் அப்ளிகேஷன் அல்லது www.shjpolice.gov.ae என்ற இணையதளம் அல்லது ஹாட்லைன் 80040 மூலம் கிடைக்கும் (Hares) சேவை உட்பட பல்வேறு வழிகளில் தெருவில் பொருட்கள் விற்கும் வியாபாரிகள் மீது சந்தேகம் ஏற்பட்டால் அது குறித்து புகார் அளிக்குமாறு பொதுமக்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.