ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்களிடையே மொபிலிட்டி வாகனமான “இ-ஸ்கூட்டர் (e-scooter) அல்லது இ-பைக் (e-bike)” பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வெகுவாகவே உயர்ந்து வருகிறது. மேலும் சமீபத்திய மாதங்களில் பெட்ரோல் விலைகள் தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வருவதாலும் பல குடியிருப்பாளர்கள் தங்கள் வீட்டிற்கும் அலுவலக பயணங்களுக்கும் இ-ஸ்கூட்டர் போன்ற மொபிலிட்டி வாகனங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இதேபோன்று அமீரகத்திலேயே அதிகளவிலான மக்கள் வசிக்கக்கூடிய துபாயிலும் குடியிருப்பாளர்களிடையே இ-ஸ்கூட்டர் பயன்பாடு அதிகளவில் உள்ளது. இதனால் இ-ஸ்கூட்டர் பயன்படுத்தும் ரைடர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், போக்குவரத்து விதிகளை சீர்படுத்தவும் இ-ஸ்கூட்டர்களின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் புதிய விதிகள் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த புதிய விதியில் இ-ஸ்கூட்டர் ஓட்டும் ரைடர்கள் விரைவில் துபாயில் ‘டிரைவிங் லைசென்ஸ் பெர்மிட்’ பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
துபாயில் இ-ஸ்கூட்டர் பயனப்டுத்தும் ரைடர்களின் அலட்சியம் மற்றும் போக்குவரத்து விதிகளுக்கு இணங்காத காரணத்தால் பல இ-பைக் ஓட்டுநர்கள் எப்படி கடுமையான விபத்துகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதை துபாய் காவல்துறை இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெரிவித்திருந்தது. தற்போது அதன் தொடர்ச்சியாகவே இ-ஸ்கூட்டர் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் முயற்சிகளில் துபாய் புதிய விதிகளை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குடியிருப்பாளர்களிடையே இ-ஸ்கூட்டர் தேவை அதிகரித்து வருவதாலும், ரைடர்ஸ் மற்றும் பிற சாலைப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் துபாய் அரசு வெளியிட்டுள்ள இ-ஸ்கூட்டர் பயனாளர்களுக்கான புதிய விதிகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இ-ஸ்கூட்டர்களுக்கான ஓட்டுநர் உரிம அனுமதி பற்றி கூறியது என்ன?
>> ஓட்டுநர் உரிம அனுமதிகள் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் (RTA) வழங்கப்படும். எனினும் இ-ஸ்கூட்டர் ரைடர்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வழிமுறை இன்னும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அல்லது வேறு எந்த வகை பைக்குகளையும் டிரைவிங் லைசென்ஸ் பெர்மிட் பெறாமல் மக்கள் ஓட்டக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
>> RTA வின் டைரக்டர் ஜெனரல் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவரால் வழங்கப்பட்ட முடிவுகளுக்கு இணங்க, “இ-ஸ்கூட்டர்கள் அல்லது வேறு எந்த வகையான பைக்குகளுக்கும்” RTA உரிமங்களை வழங்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உரிமம் பெறுவதற்கான கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இ-ஸ்கூட்டர்களை எங்கே பயன்படுத்தலாம்?
புதிய விதிகளின்படி, நிறுவனங்கள் அல்லது தனிநபர்களால் வாடகைக்கு வழங்கப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் RTA ஆல் அவர்களுக்காக நியமிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் தடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஜாகிங் அல்லது நடைப் பாதைகளில் இ-ஸ்கூட்டர்களை பயன்படுத்தக் கூடாது.
இ-ஸ்கூட்டர்களுக்கான அதிகபட்ச வேக வரம்பு என்ன?
- RTA இணையதளத்தின்படி, அதிகபட்ச வேக வரம்பு 20kmph ஆகும்.
ரைடருடன் மற்றொரு நபரும் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்களா?
- அனுமதி இல்லை. ரைடர் ஒருவர் மட்டுமே இ-ஸ்கூட்டர்களை பயன்படுத்தலாம். இ-ஸ்கூட்டரில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் எதுவும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இ-பைக் ஓட்டுபவர்களுக்கான மூன்று அடிப்படை விதிகள் என்னென்ன?
- வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கும் விதமாக பிரதிபலிப்பு ஜாக்கெட் மற்றும் தலைக்கவசங்கள் அவசியம் அணிந்திருக்க வேண்டும்..
- சாலையில் செல்லும் மற்ற வாகனங்கள் மற்றும் பாதசாரிகளிடமிருந்து பாதுகாப்பான தூரத்தை பராமரிக்க வேண்டும்.
- பாதசாரிகளுக்கான பிரத்யேக சாலையை கடக்கும் போது அவர்கள் இ-ஸ்கூட்டரில் இருந்து இறங்க வேண்டும்.
இ-ஸ்கூட்டர்களை எங்கே நிறுத்த வேண்டும்?
நியமிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களில் (ஏதேனும் இருந்தால்) நிறுத்த வேண்டும். நியமிக்கப்படாத இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் மற்றும் வாகனங்கள், பாதசாரிகள் மற்றும் பொது இடத்தை பயன்படுத்துபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.
இ-ஸ்கூட்டர் ஓட்டுபவர்களுக்கு குறைந்தபட்ச வயது என்ன?
16 வயதிற்குட்பட்ட ரைடர்கள் மின்சார பைக் அல்லது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அல்லது RTA ஆல் குறிப்பிடப்பட்ட வேறு எந்த வகை பைக்கையும் ஓட்ட அனுமதிக்கப்படுவதில்லை.
விபத்து ஏற்பட்டால் ஓட்டுநர்கள் என்ன செய்ய வேண்டும்?
இ-ஸ்கூட்டர் பயன்படுத்துபவர்கள் ஏதேனும் விபத்தில் சிக்கினால் விபத்தின் தன்மையைப் பொறுத்து காவல்துறை, RTA அல்லது ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு சம்பவத்தைப் புகாரளிக்க வேண்டும்.
விதிகளை மீறினால் என்ன தண்டனைகள்?
சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறினால் அபராதம் மற்றும் தண்டனை விதிக்கப்படலாம். “முதல் விதிமீறலின் ஒரு வருடத்திற்குள் மீண்டும் மீறினால் 30 நாட்களுக்கு பைக்கை பறிமுதல் செய்வது மற்றும் குறிப்பிட்ட காலத்திற்கு பைக்கை ஓட்டுவதற்கு தடை விதிக்கலாம். 18 வயதிற்குட்பட்ட ஒருவரால் மீறப்பட்டால், அபராதம் செலுத்துவதற்கு அவரது பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் பொறுப்பாவார்கள். அபராதம் செலுத்தத் தவறினால் பைக் பறிமுதல் செய்யப்படும்.
இ-ஸ்கூட்டர்களில் இருக்க வேண்டிய கட்டாய தொழில்நுட்பத் தேவைகள் என்ன?
- முகப்பு விளக்கு மற்றும் பின்புற விளக்குகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
- ஸ்டீயரிங் கையில் (டி-பார்) ஹார்ன் பொறுத்தப்பட்டிருக்க வேண்டும்.
- சாலைக்கு ஏற்ற டயர்கள் கொண்டதாக இருக்க வேண்டும்.
- முன் மற்றும் பின் டயர்களில் பிரேக்குகள் பொறுத்தப்பட்டிருக்க வேண்டும்




