அபுதாபி சர்வதேச விமான நிலையத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அபுதாபியின் முதல் குறைந்த கட்டண விமான நிறுவனமான “ஏர் அரேபியா அபுதாபி”, வரும் ஏப்ரல் 27 ம் தேதி முதல் அபுதாபியிலிருந்து சென்னைக்கு புதிய நேரடி விமான போக்குவரத்து சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளது.
அபுதாபியிலிருந்து சென்னைக்கு தொடங்கப்படவுள்ள இந்த நேரடி விமான சேவை குறித்த தகவலை ஏர் அரேபியா அதன் அதிகாரபூர்வ சமுக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் எதிஹாட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தை தொடர்ந்து ஏர் அரேபியாவும் சென்னைக்கு நேரடி விமான சேவையை வழங்கும். இதனால் அபுதாபியிலிருந்து சென்னைக்கு இனி குறைந்த விமான கட்டணத்தில் நேரடியாக பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 2020 இல் அபுதாபி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் அரேபியா அபுதாபி விமான சேவை தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளின் முக்கிய நகரங்களுக்கு புதிய சேவையை ஏர் அரேபியா அறிவித்து வருகிறது. தற்போது சென்னைக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய சேவையானது அபுதாபியிலிருந்து இயங்கும் ஏர் அரேபியாவின் 17வது வழித்தடமாகும்.
இதேபோன்று இந்தியாவின் மற்றொரு நகரமான ஜெய்ப்பூருக்கும் அபுதாபியிலிருந்து நேரடி விமான போக்குவரத்து சேவையை தொடங்குவதாக ஏர் அரேபியா அறிவித்துள்ளது. இந்த புதிய சேவை வரும் மே மாதம் 5 ம் தேதி முதல் தொடங்கவிருப்பதாகவும் தனது சமூக வலைதள பக்கத்தில் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் இப்போது ஏர் அரேபியாவின் இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலமோ, கால் சென்டரை அழைப்பதன் மூலமோ அல்லது பயண முகவர் மூலமாகவோ அபுதாபி மற்றும் சென்னை இடையே தங்கள் நேரடி விமானங்களை முன்பதிவு செய்யலாம் எனவும் விமான நிறுவனம் கூறியுள்ளது.
