ADVERTISEMENT

UAE: படகு கவிழ்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்த ஆசிய நாட்டவர்..!! 16 பேர் பத்திரமாக மீட்பு…

Published: 26 Apr 2023, 8:18 AM |
Updated: 26 Apr 2023, 8:26 AM |
Posted By: Menaka

ஷார்ஜா கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த நிலையில் 16 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு குழந்தை உட்பட 4 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்து கிழக்குப் பிராந்திய காவல் துறையின் இயக்குநர் கர்னல் டாக்டர் அலி அல் ஹமூடி அவர்கள் கூறுகையில், ஓய்வுநேரப் படகு கவிழ்ந்து, பயணிகள் கடலில் மூழ்கியதை அடுத்து, அதன் செயல்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர்களைக் காப்பாற்ற மீட்புக் குழுக்கள், தேசிய ஆம்புலன்ஸ், போலீஸ் ரோந்து மற்றும் கடலோர காவல்படை ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் கூறிய அவர், மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதேசமயம், துரதிர்ஷ்டவசமாக, காயமடைந்தவர்களில் 38 வயதான ஆசிய நாட்டவர் ஒருவர், உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் காயங்களின் தன்மை அல்லது அளவு குறித்த விவரங்கள் ஏதும் காவல்துறை தெரிவிக்காத நிலையில், அதிகாரிகளின் ஆரம்பகட்ட விசாரணையில், கப்பலின் இயக்கத்தில் ஏற்பட்ட விதிமீறல்களால் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. எனவே, படகின் செயற்பாட்டிற்கு காரணமானவர்கள் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், இதுபோன்ற ஓய்வுநேர படகு நிறுவனங்கள் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்குமாறு மூத்த அதிகாரி வலியுறுத்தியுள்ளார். அதுபோல, அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையை மீறாமல் எச்சரிக்கையுடன் பயணம் செய்வதன் முக்கியத்துவத்தையும், சுற்றுலாப் பயணிகளின் நல்வாழ்வைப் பாதுகாக்க கப்பலில் உள்ள அனைவரும் லைஃப் ஜாக்கெட்டுகளை அணிவதை உறுதி செய்வதையும் அவர் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.