ADVERTISEMENT

UAE: பாஸ்போர்ட் மற்றும் விசா சேவைகளை பெற ஆன்லைன் முன்பதிவு அவசியம்..!! குறிப்பிட்ட தொழிலாளர்களுக்கு மட்டுமே டோக்கன் முறையில் சேவை..!! இந்திய தூதரகம் தகவல்..!!

Published: 18 Jun 2020, 5:35 PM |
Updated: 18 Jun 2020, 5:42 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கக்கூடிய இந்திய குடிமக்களுக்கு பாஸ்போர்ட் மற்றும் விசா தொடர்பான சேவைகளை வழங்கி வரும் BLS இன்டர்நேஷனல் நிறுவனம், சேவைகளை பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ஏற்கனவே அமீரகத்தில் பிரீமியம் முறையில் வாடிக்கையார்களுக்கு ஆன்லைன் முன்பதிவு வசதியை வழங்கி வரும் இரண்டு மையங்களை தவிர, அமீரகம் முழுவதும் உள்ள 10 BLS மையங்களிலும் தற்போது முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து துபாயில் இருக்கக்கூடிய இந்திய துணைத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், ஜூன் 15 முதல் BLS இன்டர்நேஷனல் நிறுவனம் அதன் வலைத்தளத்தின் மூலம் ஆன்லைன் முன்பதிவு செய்து கொள்ளும் முறையை தொடங்கியதாக கூறியுள்ளார். பாஸ்போர்ட் மற்றும் விசா சேவைகளை பெற விண்ணப்பித்தவர்களில் www.blsindiavisa-uae.com இல் பதிவு செய்யப்பட்ட நியமனங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பதாரர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இருப்பினும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய முடியாத தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், முன்பதிவின்றி BLS மையங்களுக்கு நேரடியாக வருகை தர கூடிய வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து தனது சேவைகளை வழங்கும் என தூதரக அதிகாரி தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் இந்த நேரடி சேவைகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆன்லைன் முன்பதிவு முறை சேவை மையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கவும், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையான சமூக இடைவெளியை உறுதிப்படுத்தவும் உதவும் என்றும் நாங்கள் நம்புகிறோம் என்பதாகவும் இந்திய துணை தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT