ADVERTISEMENT

சவுதிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களுக்கு அதிகபட்ச ஹெல்த் இன்சூரன்ஸ் கவரேஜ்..!! பல்சிகிச்சை முதல் பிரசவம் வரை அவசர சிகிச்சைகள் கவரேஜில் அடங்கும் என தகவல்…!!

Published: 12 Oct 2023, 1:39 PM |
Updated: 12 Oct 2023, 2:13 PM |
Posted By: Menaka

சவூதி அரேபிய அரசானது சவூதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கான புதிய சுகாதார காப்பீட்டு தொகைக்கான வரம்பை சமீபத்தில் அறிவித்துள்ளது. அதாவது சவூதிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 100,000 சவுதி  ரியால்களை அதிகபட்ச சுகாதாரக் காப்பீட்டுத் தொகையாக தற்பொழுது நிர்ணயித்துள்ளது.

ADVERTISEMENT

சவூதி சுகாதாரக் காப்பீட்டுக் கவுன்சிலால் (Saudi Council of Health Insurance) அங்கீகரிக்கப்பட்ட காப்பீட்டுக் கொள்கையின் விதிமுறைகளின்படி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அவசரகாலச் சூழ்நிலைகளில் மட்டுமே  இந்த சுகாதார சேவைகளைப் பெறுவதற்கு உத்தரவாதம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதாரக் காப்பீட்டு கொள்கையானது, காப்பீட்டின் கீழ் உள்ள சேவைகளின் வகைகளைப் பொறுத்து அதிகபட்ச இன்சூரன்ஸ் கவரேஜ் வரம்பாக 100,000 சவுதி ரியால்களை குறிப்பிடுகிறது. காப்பீட்டு பாலிசியின் படி, அவசரகால அத்தியாவசிய மருத்துவச் சேவைகள், சிகிச்சை, மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கான உண்மையான செலவுகள் போன்றவற்றிற்கு இழப்பீடு பெறலாம் என்றும், அத்துடன் காப்பீட்டாளருக்கு நோய் உள்ளது என்பது உரிமம் பெற்ற மருத்துவரால் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளும் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

காப்பீட்டாளர் இழப்பீடு பெறக் கூடிய செலவினங்களில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல், மருத்துவப் பரிசோதனைகள், நோய் கண்டறிதல், சிகிச்சை மற்றும் மருந்துகள் போன்ற அவசரகாலச் செலவுகள் அடங்கும். இவையனைத்தும் ஹெல்த் இன்சூரன்ஸ் கவரேஜின் ஒரு பகுதியாக உள்ளடக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் கர்ப்பம் மற்றும் பிரசவம், போக்குவரத்து விபத்துக்களால் ஏற்பட்ட காயங்கள், அவசர டயாலிசிஸ் வழக்குகள் மற்றும் இறந்த சுற்றுலாப் பயணிகளின் பிரேதங்களை அவரது தாய் நாட்டிற்கு அனுப்புவதற்கான செலவுகள் போன்றவையும் இந்த கவரேஜில் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே, சுற்றுலாப் பயணிகள் தங்களுக்கான சுகாதார காப்பீட்டை விசா வழங்குவதற்கான ஒருங்கிணைந்த தளத்திற்குச் சென்று, சுற்றுலா விசா விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்வதன் மூலம் பெறலாம் என்றும் அத்துடன் சுற்றுலா விசா வழங்கப்பட்ட நாளிலிருந்து சுகாதார காப்பீடு செல்லுபடியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் சவுதியின் அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள சுகாதார காப்பீட்டு கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை நெட்வொர்க்கில் இருந்து அவசரகால சிகிச்சைக்கான சுகாதார சேவைகளை சுற்றுலாப் பயணிகள் அணுகலாம் என்று பாலிசி உத்தரவாதம் அளிக்கிறது. சுகாதாரக் காப்பீடு நிறுவனங்களைப் பொறுத்த வரை, அவை விசா வழங்குவதற்கான ஒருங்கிணைந்த தேசிய தளத்தின் பட்டியலில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் உரிமம் பெற்ற சுகாதார சேவை வழங்குநர்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டவை ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel