குவைத்தில் வெளிநாட்டு மக்கள் தொகையினை குறைத்து அனைத்து அரசு சார்ந்த துறைகளிலும் அந்நாட்டு குடிமக்களையே பணியமர்த்தும் திட்டத்தினை கடந்த சில மாதங்களாக குவைத் அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக குவைத்தின் பொதுப்பணித்துறை அமைச்சகத்தில் பணிபுரியும் 400 வெளிநாட்டு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 400 ஊழியர்களின் பெயர்கள் உள்ளன என்றும் அவர்கள் நிர்வாக, சட்ட மற்றும் தொழில்நுட்ப பதவிகளில் பணிபுரிந்து வருபவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பாக 150 வெளிநாட்டு அமைச்சக ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக தற்பொழுது மீதமுள்ள ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலுள்ள ஊழியர்களை படிப்படியாக பணிநீக்கம் செய்யும் இந்த திட்டத்தின் அடுத்த கட்டமானது இந்த ஆண்டு இறுதிக்குள் மேற்கொள்ளப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னதாக அந்நாட்டின் எண்ணெய் துறைகளில் இனி வெளிநாட்டினரை பணியமர்த்துவது நிறுத்தப்படுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
மேலும், அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் வெளிநாட்டினரும் 30 சதவீதம் மட்டுமே அந்நாட்டு குடிமக்களும் இருப்பதால் அந்நாட்டின் மக்கள்தொகையினை 30 சதவீதம் வெளிநாட்டினரும் 70 சதவீதம் அந்நாட்டு குடிமக்களாகவும் மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.