வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் விலையில் 24 சதவீதம் குறைப்பதாக எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகம் (Ministry of Energy and Infrastructure) அறிவித்துள்ளது. இந்த முடிவு சமூக உறுப்பினர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பது, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது மற்றும் அவர்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று எரிசக்தி அமைச்சர் சுஹைல் முகமது ஃபராஜ் அல் மஸ்ரூய் அவர்கள் இன்று தெரிவித்துள்ளார்.
அமைச்சகம் இது குறித்து கூறுகையில், “புதிய விலைகள் நுகர்வோரின் வாழ்க்கையை மேம்படுத்துகின்றன, உள்ளூர் சந்தைகளில் போட்டித்தன்மையை அடைகின்றன, சேவை வழங்குநர்களின் விலைகள் அல்லது சட்டவிரோத இலாபங்கள் குறித்து எந்தவிதமான ஆபத்துகளையும் தடுக்கும் மற்றும் வீடுகளுக்கு உயர்தர எரிவாயு விநியோகத்தை பராமரிக்கும்” என்று தெரிவித்துள்ளது.
மேலும், எரிவாயு சிலிண்டர்களுக்கான புதிய விலையானது அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விலைப்பட்டியல்
- 11 கிலோ சிலிண்டர் – 60 திர்ஹம்ஸ்
- 22 கிலோ சிலிண்டர் – 115 திர்ஹம்ஸ்
- 44 கிலோ சிலிண்டர் – 230 திர்ஹம்ஸ்
எமிரேட்ஸ் கேஸ் நிறுவனம் துபாய் மற்றும் வடக்கு அமீரகப் பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும், எமரத் கேஸ் நிறுவனம் சிலிண்டர்களை துபாயில் மட்டுமே விநியோகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.