ADVERTISEMENT

UAE: அபுதாபி, ஃபுஜைராவில் உள்ள ஷேக் சையத் மசூதிகள் பார்வையாளர்களுக்காக நாளை முதல் திறப்பு..!!

Published: 3 Oct 2020, 4:33 PM |
Updated: 3 Oct 2020, 4:33 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து இறைவழிபாட்டிற்கும், சுற்றுலாவாசிகள் பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டிருந்த, அபுதாபி மற்றும் ஃபுஜைராவில் உள்ள ஷேக் சையத் மசூதிகள் (The Sheikh Zayed Grand mosques) நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் பார்வையாளர்களுக்கு திறக்கப்படும் என்று ஜனாதிபதி விவகார அமைச்சகம் (Ministry of Presidential Affairs) இன்று அறிவித்துள்ளது. மீண்டும் திறக்கப்படவிருக்கும் இரு மசூதிகளுடன், ஷேக் சையத் அவர்களின் நினைவுச்சின்னமும் (Founder’s Memorial) பார்வையாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பின் மிக உயர்ந்த தரங்களுக்கு ஏற்ப கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் கீழ் மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த இரு மசூதிகளும் மூடப்பட்டன. பல மாதங்களாக பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்பொழுது தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) ஒருங்கிணைப்பில் மீண்டும் திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் திறக்கப்படவிருக்கும் இவ்விரு மசூதிகளிலும் அனுமதிக்கப்பட்ட பார்வையாளர்களின் திறனைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் கடைபிடிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்வதே, கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், கலாச்சார இடங்களுக்கு அவர்களின் சுற்றுப்பயணத்தின் போது சமூக இடைவெளியை பின்பற்றவும், மற்றும் பார்வையாளர்களின் நடமாட்டம் சீரானதாக இருப்பதை உறுதி செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உடல் வெப்பநிலையைக் கண்டறிய மசூதிகளின் அனைத்து நுழைவாயில்களிலும் தெர்மல் கேமராக்கள் நிறுவப்படும் என்றும், அதிக வெப்பநிலையைக் கொண்டிருக்கும் பார்வையாளர்களை தனிமைப்படுத்த ஒரு சிறப்பு அறை அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, பார்வையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கும், கூட்டங்களைத் தவிர்ப்பதற்கும், பாதுகாப்பான சூழலுக்குள் ஆரோக்கியமான சுற்றுப்பயணத்திற்கு உத்தரவாதம் அளிப்பதற்கும் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.