ADVERTISEMENT

குவைத்: ஜூனிலிருந்து சம்பளம் இல்லாமல் தவித்த 99 தமிழர்கள் உட்பட 105 இந்திய தொழிலாளர்கள்..!! மனிதவள பொது ஆணையம் தலையிட்டு நடவடிக்கை..!!

Published: 5 Oct 2020, 4:49 PM |
Updated: 5 Oct 2020, 4:49 PM |
Posted By: admin

குவைத் நாட்டில் பணிபுரிந்து வந்த 105 இந்திய தொழிலாளர்களுக்கு கடந்த ஜூன் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படாமல் இருந்ததை தொடர்ந்து இந்திய தூதரகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் குவைத் நாட்டின் மனிதவளத்திற்கான பொது ஆணையம் தற்போது தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. குவைத் நாட்டில் உள்ள அல் ஷூய்பா துறைமுகத்தில் பணிபுரிந்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்த 99 தொழிலாளர்கள் உட்பட 105 இந்திய தொழிலார்களுக்கு சம்பளம் வழங்கப்படாமலும், அத்தியாவசிய தேவைகளுக்கு கூட கையில் பணமின்றியும் தவித்து வருவதாக சில நாட்களுக்கு முன்பு குவைத் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் இருந்ததால் உண்பதற்கு உணவு வாங்க கூட எங்களிடம் பணம் இல்லை என்று சம்பந்தப்பட்ட இந்திய தொழிலாளர்கள் அனைவரும் குவைத் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மனு அளித்துள்ளனர். தொழிலாளர்களின் மனுவை ஏற்றுக்கொண்ட இந்திய தூதரகமும் உடனடியாக இதில் தலையிட்டு தொழிலாளர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமும், அரசு அதிகாரிகளிடமும் நடவடிக்கை எடுக்க கலந்தாலோசித்திருப்பதாக செய்திகள் வெளிவந்திருந்தது.

இந்நிலையில் தொழிலாளர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் இந்த பிரச்சினையை தீர்க்க குவைத் நாட்டின் மனிதவள பொது ஆணையத்தின் ஊழியர்கள், 105 இந்திய தொழிலாளர்களும் தங்கியிருக்கும் மங்காஃப் பகுதிக்கு சென்று சம்பந்தப்பட்ட தொழிலாளர்களிடம் விபரங்களை கேட்டறிந்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த புகார்கள் குறித்து மனிதவள பொது ஆணையம் தெரிவிக்கையில், அல் ஷூய்பா துறைமுகத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு சம்பளத்தை செலுத்தத் தவறியது, தொழிலாளர்களின் குடியிருப்பு விசாக்களை புதுப்பிக்காமல் இருந்தது, இந்தியா செல்ல விரும்பியவர்களுக்கு பாஸ்போர்ட் தரமறுத்தது மற்றும் தங்குமிடம் போதிய வசதிகள் இல்லாமல் இருப்பது குறித்த புகார்கள் எங்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும், பிரச்சனையை விரைவாக தீர்க்கவும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT