ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவின் பாதிப்பையொட்டி மார்ச் மாதத்திற்குப் பிறகு காலாவதியான விசாக்கள் இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்படும் என்று அமீரக அமைச்சரவையில் முதலில் முடிவெடுக்கப்பட்டு அதன் பிறகு கடந்த ஜூலை மாதத்தில் இந்த தீர்மானமானது திருத்தி அமைக்கப்பட்டது.
புதிய தீர்மானத்தின் படி, அமீரகத்தில் மார்ச் 1 முதல் ஜூலை 12 வரை காலாவதியான விசாக்களை வைத்திருப்பவர்கள் தங்களின் விசாவினை புதுப்பித்துக் கொள்ளவோ அல்லது நாட்டை விட்டு வெளியேறவோ அக்டோபர் 10 ம் தேதி வரை சலுகை காலம் கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த சலுகை காலத்தையும் தாண்டி அமீரகத்தில் வசிப்பவர்களுக்கு ஓவர்ஸ்டே அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்பொழுது இந்த சலுகை காலம் முடிய இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சலுகை காலம் முடிந்த பின்னரும் அமீரகத்தில் தங்கியிருப்பவர்களுக்கு முதல் நாளில் 125 திர்ஹம்ஸ் அபராதமும் இரண்டாம் நாளில் இருந்து ஒரு நாளைக்கு 25 திர்ஹம் அபராதமும் விதிக்கப்படும் என்பதை விசாவினை புதுப்பித்துக் கொள்ளாதவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சலுகை காலம் முடிவதற்குள் தங்களின் விசாவினை புதுப்பித்துக் கொண்டோ அல்லது தங்களின் விசா நிலையை விசிட் விசா, சுற்றுலா விசா போன்ற விசாக்களில் மாற்றிக்கொண்டோ அமீரகத்தில் தொடர்ந்து தங்கி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.