ADVERTISEMENT

விமான நிலையத்தில் சிக்கித்தவித்த 300 இந்தியர்களையும் பாதுகாப்பாக இருப்பிடங்களுக்கு அனுப்பி வைத்த துபாய்..!!

Published: 8 Oct 2020, 12:17 PM |
Updated: 8 Oct 2020, 12:17 PM |
Posted By: admin

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சிக்கித் தவித்த 300 பயணிகள் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் அமீரகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

விமான நிலையத்தில் சிக்கி தவித்த பயணிகளை அவர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு அழைத்து செல்ல வதிவிட மற்றும் வெளிநாட்டு விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA), விமான நிலையத்தின் பாஸ்போர்ட் துறை, மற்றும் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஆகிய துறைகளில் இருந்து ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டு அவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு ஏற்ப பயண விதிமுறைகளை புதுப்பித்ததன் காரணமாக சில பயணிகள் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) இமிகிரேஷன் செயல்முறை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு அதனால் அவர்கள் விமான நிலையத்திலேயே சிக்கி தவிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

புதிய வழிமுறைகளின் படி, அமீரகத்தின் பிற பகுதிகளில் வழங்கப்பட்ட விசாவினை வைத்திருந்து துபாய் திரும்பும் குடியிருப்பாளர்கள் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையத்திடம் (ICA) இருந்து ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, துபாயில் வழங்கப்பட்ட விசாவினை வைத்திருக்கும் குடியிருப்பாளர்கள் GDRFA ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் பத்திரிகை, தகவல் மற்றும் கலாச்சாரத்துக்கான தூதர் நீரஜ் அகர்வால், நேற்றிரவு ஃப்ளைதுபாய் விமானத்தில் வந்த கிட்டத்தட்ட 290 இந்திய பயணிகள் அமீரக அரசின் ஓப்புதல் இல்லாத காரணத்தினால் நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், ஃப்ளைதுபாய் விமான நிறுவனம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஏழு பேருந்துகள், துபாயில் இருந்து அபுதாபி மற்றும் அல் அய்ன் பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றிச்சென்றதாகவும், அதே போன்று எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மூலம் அமீரகம் வந்து டெர்மினல் 3-ல் சிக்கித்தவித்த பயணிகளும் பாதுகாப்பாக துபாய் அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் நீரஜ் அகர்வால் தெரிவித்துள்ளார்.