ADVERTISEMENT

UAE: கிரெடிட் கார்டு மோசடியில் நீங்கள் பணத்தை இழந்தால் வங்கி பொறுப்பேற்குமா? அமீரகச் சட்டம் கூறுவது என்ன?

Published: 16 Dec 2024, 11:48 AM |
Updated: 16 Dec 2024, 12:01 PM |
Posted By: Menaka

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றார்போல பண மோசடிகளும் பலவிதமாக பெருகிக் கொண்டிருக்கின்றன. ஒருபுறம் நாம் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை வங்கியில் சேமித்து டெபிட் கார்டு, இ-பேமண்ட் என ஆன்லைன் பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்கொண்டாலும், மறுபுறம் சில மோசடிக்காரர்கள் தந்திரம் செய்து படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைத்து மக்களையும் எளிதாக ஏமாற்றிவிடுகிறார்கள்.

ADVERTISEMENT

டிஜிட்டல் தளங்களில் மக்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் சிறிய பிழைகள் கூட இது மாதிரியான நிதி இழப்பிற்கு வழிவகுக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்திலும் குடியிருப்பாளர்களை குறிவைத்து இதுபோன்ற நிதி மோசடிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதனால் அமீரகத்தில் உள்ள அதிகாரிகள் டிஜிட்டல் மோசடிகளுக்கு எதிராக கவனமாக இருக்குமாறு குடியிருப்பாளர்களுக்கு அவ்வப்போது எச்சரிக்கை விடுக்கின்றனர்.

அவ்வாறு ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் கிரெடிட் கார்டு மோசடிகள் மூலம் இழந்த பணத்திற்கு அவர் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் பொறுப்பு ஏற்குமா? இத்தகைய குற்றங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா? என்பது போன்ற பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் நம்மில் பலருக்கும் இருக்கலாம். அதற்கான சட்டப்பூர்வ விளக்கங்களைப் பின்வருமாறு பார்க்கலாம்.

ADVERTISEMENT

ஹேக்கிங் இ-பேமெண்ட் ஆப்ஸ் தொடர்பான வதந்திகள் மற்றும் சைபர் குற்றங்களை எதிர்த்தல் தொடர்பான அமீரகத்தின் 2021 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணை எண். 34 பிரிவு 15 (2) இன் படி , அமீரகத்தில் இ-பேமெண்ட் பரிவர்த்தனை ஆப் அல்லது இணையதளங்கள் வழியாக பண மோசடி செய்வது சிறைத்தண்டனை மற்றும் அபராதத்திற்கு வழிவகுக்கக் கூடிய சைபர் குற்றமாகும்.

இது எந்தவொரு கிரெடிட் கார்டையும், டெபிட் கார்டையும் போலியாக உருவாக்குவது, குளோன் செய்தாலும் அல்லது நகலெடுத்தாலும், அல்லது ஏதேனும் இ-பேமண்ட் அல்லது அதன் தரவு அல்லது தகவல்களை பயன்படுத்தி நிதி மோசடி செய்தால் சிறைத்தண்டனை அல்லது 200,000 திர்ஹம்ஸ்க்குக் குறையாத அபராதம் அல்லது 2 மில்லியனுக்கும் அதிகமாக அபராதம் விதிக்கப்படும் என்று சட்டம் கூறுகிறது.

ADVERTISEMENT

தனக்காகவோ அல்லது மூன்றாம் தரப்பினருக்காகவோ பிறருடைய நிதிகள் அல்லது சொத்துக்களை பெற அல்லது இந்த அட்டை மூலம் மூன்றாம் தரப்பினருக்குக் கிடைக்கும் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான நோக்கத்துடன் அங்கீகாரம் இல்லாமல் எந்தவொரு கிரெடிட்,  டெபிட் கார்டு அல்லது வேறு ஏதேனும் இ-பேமண்ட் ஆப் அல்லது அதன் தரவு அல்லது தகவல்களைப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடும் எவருக்கும் மேற்கூறிய அதே தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே நிதிக் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த கடமைப்பட்டுள்ளன. இது நாட்டில் உள்ள அனைத்து உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களுக்கும் 2020 ஆம் ஆண்டின் அதன் சுற்றறிக்கை எண். 8 மூலம் UAE மத்திய வங்கி வழங்கிய நுகர்வோர் பாதுகாப்பு ஒழுங்குமுறையின் பிரிவு 6.2.2.6 இன் படி உள்ளது.

அதில், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள் நிதி மோசடிகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வாடிக்கையாளர்களான பொதுமக்களுக்கு உணர்த்துவது தொடர்பான போதிய நுகர்வோர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், நிதி நிறுவனங்களின் நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளின் பிரிவு 6.2.2.5 இன் படி, நிதி நிறுவனங்கள் புதுப்பித்த பாதுகாப்பு அமைப்புகளை பராமரிக்க வேண்டும் மற்றும் தேவைக்கேற்ப புதிய இணைய பாதுகாப்பு உத்திகளை செயல்படுத்த தயாராக இருக்க வேண்டும். இது வளர்ந்து வரும் மோசடிகளுக்கு எதிராக அவர்கள் திறம்பட பாதுகாக்க முடியும் என்பதை இது உறுதி செய்கிறது.

கூடுதலாக, நிதி நிறுவனங்கள் நிதி குற்றங்களால் வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் நிதி இழப்பு ஏற்பட்டால் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், நிதிக் குற்றங்கள் தவிர்த்து, வாடிக்கையாளர்களின் அலட்சியம் அல்லது மோசடியான நடத்தை காரணமாக ஏற்படும் நிதி இழப்புகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு நிதி நிறுவனங்கள் பொறுப்பேற்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இது நிதி நிறுவனங்களின் நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளின் பிரிவு 6.2.2.4 க்கு இணங்க உள்ளது. இதில் “உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள், நிதிக் குற்றங்கள், துஷ்பிரயோகம், இணையத் தாக்குதல்கள் மற்றும் சொத்துக்கள் மற்றும் தகவல்களின் துஷ்பிரயோகம் ஆகியவற்றின் விளைவாக ஏற்படும் நிதி இழப்புகள் மற்றும் செலவுகளுக்கு சரியான நேரத்தில் இழப்பீடு வழங்க வேண்டும், நுகர்வோரின் மொத்த அலட்சியம் அல்லது மோசடியான நடத்தை காரணமாக இந்த இழப்பு ஏற்பட்டது என்றால் நிதி நிறுவனங்கள் பொறுப்பு ஏற்காது” என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கூறிய சட்ட விதிகளின் அடிப்படையில், அமீரகத்தில் சைபர் கிரைம் காரணமாக ஏற்படும் நிதி இழப்புகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்க வங்கிகள் கடமைப்பட்டிருக்கலாம். வாடிக்கையாளர்களின் அலட்சியம் அல்லது மோசடியான நடத்தை காரணமாக நிதி இழப்பு ஏற்படவில்லை என்ற நிலையில், அவர்கள் இழந்த பணத்தை வங்கி திருப்பித் தர வேண்டியிருக்கும்.

இதைத் தொடர, வாடிக்கையாளர்கள் அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் முறையான புகாரை பதிவு செய்ய வேண்டும், பின்னர் அந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தலாம். ஏற்கனவே புகார் அளித்து, வங்கி அந்த விஷயத்தை முடித்துவிட்டாலும், திருப்தி அடையவில்லை என்றால், மேலும் விசாரணை மற்றும் தீர்வுக்காக UAE மத்திய வங்கியை அணுகலாம். கூடுதலாக, பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் ஆதாரங்களைச் சமர்ப்பித்து, காவல்துறையிடம் நீங்கள் புகாரளிக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel