அமீரகத்தில் போலி பரிசுகளை உறுதிப்படுத்தும் குறுஞ்செய்திகள் (SMS) அல்லது தொலைபேசி அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அபுதாபி காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மோசடி செய்பவர்கள் அனுப்பிய SMS அல்லது அவர்கள் செய்த தொலைபேசி அழைப்புகள் மூலமாக அவர்கள் மக்களின் வங்கி விவரங்களை தெரிந்துகொண்டு மக்களை ஏமாற்றுவதாக காவல்துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், “மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் குடியிருப்பாளர்களுக்கு SMS அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலமாக அவர்கள் போலி பரிசு குறித்து தெரியப்படுத்தி அதனை அவர்கள் பெறுவதற்கு வங்கி விவரங்களைத் தெரிவிக்குமாறு கேட்கப்படுகிறார்கள் அல்லது வங்கிக்கணக்கை புதுப்பிப்பதற்கு தங்களின் வங்கிக்கணக்கு குறித்த விபரங்களை தெரிவிக்குமாறு கேட்கப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் கூறுகையில், “உங்கள் ரகசிய வங்கி தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உங்கள் வங்கி கணக்கு அல்லது கிரெடிட் கார்டு தகவல், ஆன்லைன் வங்கிக்கான பாஸ்வேர்டு, ஏடிஎம்களுக்கான தனிப்பட்ட அடையாள எண்கள், பாதுகாப்பு எண் (CCV) அல்லது பாஸ்வேர்டு ஆகியவற்றைப் பாதுகாக்கவும், அவற்றை மற்றவர்களிடம் கூற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். வங்கி ஊழியர்கள் ஒருபோதும் அத்தகைய தகவல்களை உங்களிடம் கேட்கமாட்டார்கள்” என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தகவல் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இதுபோன்ற பணப் பரிசுகளை வென்றது குறித்து தெரிவிக்க தொலைபேசியில் அழைக்க வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர். அதே போன்று பொதுமக்களும் யாரென்று தெரியாத தொலைபேசி எண்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்றும், அவர்களின் தனிப்பட்ட மற்றும் நிதி தகவல்களின் ரகசியத்தன்மையை பாதுகாத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதுபோன்ற முறையில் யாரேனும் உங்களை அணுகினால் அதிகாரிகளுக்கு உடனடியாக இது குறித்து தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர். இது போன்ற புகார்களுக்கு ஹாட்லைன் எண்ணான 2828 என்ற எண்ணிற்கோ அல்லது அமான் (Aman) சேவை மையத்தின் 8002626 என்ற எண்ணையோ தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.