ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் ஒவ்வொரு மாதம் 3-ம் தேதியும் பிக் டிக்கெட்டிற்கான (Big Ticket) குலுக்கல் நடைபெற்று வெற்றியாளர்களின் பெயர்கள் வெளியிடப்படும். அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இந்த மாதத்திற்கான பிக் டிக்கெட் ரேஃபிள் டிராவில் (Big Ticket raffle draw) குவைத்தில் வசிக்கும் இந்தியர் ஒருவர் 15 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையை தட்டிச்சென்றுள்ளார்.
குவைத்தில் வசிக்கும் இந்தியரான நோபின் மேத்யூ என்பவர், தான் வென்ற டிக்கெட் எண் 254806 ஐ அக்டோபர் 17 அன்று வாங்கியதாகக் கூறியுள்ளார். அவரை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தொடர்பு கொண்ட போது “எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எனக்கு இது மிகவும் அதிர்ச்சியாக இருக்கின்றது” என்று தெரிவித்துள்ளார்.
இதே போன்று கடந்த மாதமும் பிக் டிக்கெட்டின் வெற்றியாளர் அமீரகத்தை சேர்ந்தவராக அல்லாமல் பஹ்ரைனில் வசிக்கும் சவுதி நாட்டைச் சேர்ந்தவர் பிக் டிக்கெட்டை வென்றதாக அறிவிக்கப்பட்டது.
தற்பொழுது டிசம்பர் மாதத்திற்கான டிக்கெட்களானது விற்பனை செய்யப்படுகிறது. இந்த டிக்கெட்டுகளை இம்மாதம் 30-ம் தேதி வரை வாங்கலாம். இதில் வெல்பவருக்கு 12 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.