ADVERTISEMENT

அபுதாபியின் அழகியல் தோற்றத்தை பாதிக்கும் குடியிருப்பாளர்களுக்கு கடும் அபராதம்..!! அபுதாபி முனிசிபாலிட்டி அறிவிப்பு..!!

Published: 1 Apr 2025, 11:25 AM |
Updated: 1 Apr 2025, 11:25 AM |
Posted By: Menaka

ஐக்கய அரபு அமீரகத்தில் நகரத்தின் தோற்றத்தையும் பொது சுகாதாரத்தையும் மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஒட்டுமொத்த தோற்றத்தை சீர்குலைக்கும் அல்லது சுகாதார ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடிய குடியிருப்பாளர்களுக்கும் மற்றும் விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கும் அபுதாபி அரசு கடுமையான தண்டனைகளை அமல்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT

அந்த வகையில், அபுதாபி எமிரேட்டின் பொது தோற்றத்தை சிதைக்கும் அல்லது பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் எந்தவொரு பொருட்களையும் கட்டிடத்தின் மொட்டைமாடிகள் அல்லது பால்கனிகளில் விட்டுச் செல்பவர்கள் அல்லது சேமித்து வைப்பவர்களுக்கான கடுமையான அபராதங்களை அபுதாபி முனிசிபாலிட்டி மற்றும் போக்குவரத்து துறை (DMT) தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டின் சட்டம் எண் 2 இன் படி, முதல் குற்றத்திற்கு 500 திர்ஹம் முதல் இரண்டாவது குற்றத்திற்கு 1,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும். அதுவே விதிமீறலில் ஈடுபட்டு அபராதம் விதிக்கப்பட்ட நபர் மூன்றாவது முறையாக விதிமீறலில் ஈடுபட்டால் அல்லது மீண்டும் மீண்டும் விதிமீறல் தொடர்ந்தால் 2,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என அபுதாபி முனிசிபாலிட்டி குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

இது சுத்தமான மற்றும் நிலையான நகர்ப்புற சூழலைப் பராமரிக்க அதிகாரிகளின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். பால்கனிகளில் சேமிக்கப்படும் பொருட்களுக்கான அபராதங்கள் தவிர்த்து, கூடுதலாக வணிகங்களின் கட்டிட முகப்புகளில் அங்கீகரிக்கப்படாத மாற்றங்கள், கைவிடப்பட்ட வாகனங்கள் மற்றும் நகரத்தின் தோற்றத்தை எதிர்மறையாக பாதிக்கும் சொத்துக்கள் போன்ற பிற மீறல்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

எடுத்துக்காட்டாக, உரிமம் பெறாத கட்டிட முகப்பு மாற்றங்கள் அல்லது அழுக்கு படிந்த மற்றும் கைவிடப்பட்ட வாகனங்களை அபுதாபியில் விட்டுச் செல்வதற்கு 4,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும். இது தவிர நகரின் அழகியலைப் பாதிக்கும் வகையில் வேலி அமைத்தல், அடைத்தல் அல்லது தங்கள் சொத்துக்களை மூடுதல் போன்றவற்றில் ஈடுபடும் சொத்து உரிமையாளர்களுக்கு திர்ஹம் 10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

ADVERTISEMENT

அதேபோல், நகரத்தின் தோற்றத்தை சிதைக்க வழிவகுக்கும் அல்லது தலைநகரில் பொது பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு சொத்துக்களையும் புறக்கணித்தால், அதன் சொத்து உரிமையாளர்களுக்கு அதிகபட்சமாக 20,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அபுதாபி முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது.

இவை தவிர, குப்பை கொட்டுதல் மற்றும் முறையற்ற சிகரெட் அகற்றலுக்கான அபராதங்களையும் அதிகாரசபை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் மீண்டும் மீண்டும் செய்யப்படும் குற்றங்களுக்கு 4,000 திர்ஹம் வரை அபராதமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமல்லாமல், அபுதாபியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களில் கூட்ட நெரிசலைத் தடுக்க அதிகாரிகள் ஆய்வுகளை அதிகரித்துள்ளனர். இந்த விதிமீறலில் ஈடுபட்டால் 5,000 முதல் 5 லட்சம் திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான நகரத்தைப் பராமரிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel