ஓமானில் கொரோனா வைரஸ் பாதிப்பையொட்டி மசூதிகள் அனைத்தும் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்தது. நாட்டில் கொரோனா பாதிப்பின் நிலவரங்களையொட்டி கலந்தாலோசித்து மீண்டும் மசூதிகள் திறக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கொரோனாவிற்கான உச்சக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான பணிகளை உச்சக்குழு மேற்கொண்டது குறித்த ஆலோசனைக்கூட்டம் ஒன்று உள்துறை அமைச்சர் சயீத் ஹமூத் பின் பைசல் அல் புசைடி அவர்கள் தலைமையில் உள்துறை அமைச்சகத்தில் நடைபெற்றது.
இந்த குழு தொற்றுநோயின் நாட்டின் மற்றும் சர்வதேச அளவில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், அதன் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் அதன் மாறுபட்ட தாக்கங்களைகுறித்து ஆலோசித்தது. விரிவான ஆலோசனையின் பின்னர் வரும் நவம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை முதல் 400 வழிபாட்டாளர்களுக்குள் கொள்ளளவு கொண்ட மசூதிகளை மீண்டும் திறக்க குழு முடிவு செய்வதாக அறிவித்துள்ளது.
இருப்பினும், வெள்ளிக்கிழமை தொழுகைக்கு விலக்கு அளித்து, தினசரி ஐந்து வேளை நடைபெறும் தொழுகைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மசூதிகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளும் தெரிவிக்கப்பட்டன.
வழிமுறைகள்:
1. ஒரு வழிபாட்டாளர் கொரோனா நோய்த்தொற்றிற்கான அறிகுறிகளை உணர்ந்தால் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு நோய்த்தொற்று இருந்தாலோ அல்லது பாதிக்கப்பட்ட நபர்களுடன் அவர் இருந்தாலோ அவர் மசூதிக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
2. மசூதியானது தொழுகைக்கான பாங்கு சொல்லப்பட்ட நேரத்தில் இருந்து 25 நிமிடங்கள் வரை மட்டுமே திறந்திருக்கும். இந்த 25 நிமிடங்களுக்குள் பாங்கு சொல்லப்பட்டு தொழுகை நடத்தப்பட்டு வழிபாட்டாளர்கள் மசூதியை விட்டு வெளியேற வேண்டும்.
3. குர்ஆன்களை வழிபாட்டாளர்கள் பயன்படுத்தக்கூடாது.
4. குளிர்சாதன பெட்டிகள் பயன்படுத்தக்கூடாது.
5. அனைத்து கழிப்பறைகளும் முற்றிலும் மூடப்பட வேண்டும்.
6. வழிபாட்டாளர்கள் தங்கள் சொந்த பிரார்த்தனை விரிப்புகளை கொண்டு வர வேண்டும்.
7. வழிபாட்டாளர்கள் மசூதிக்கு வருவதற்கு முன்பும், அதை விட்டு வெளியேறிய பின்னரும் தங்கள் கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
8. வழிபாட்டாளர்கள் மசூதிக்குள் இருக்கும்போது முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.
9. வழிபாட்டாளர்கள் 1.5 மீட்டருக்கு மிகாமல் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
10. மசூதி நிர்வாகத்திற்கு பொறுப்பான நபர்கள், மேற்குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் வழிபாட்டாளர்கள் கட்டாயம் பின்பற்றுவதை உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.