துபாய் சுகாதார ஆணையத்தின் (DHA) மருத்துவமனைகள் மற்றும் ஸ்க்ரீனிங் மையங்கள் 3 முதல் 16 வயது வரையிலான குழந்தைகளுக்கு உமிழ்நீர் அடிப்படையிலான கொரோனா பரிசோதனை மேற்கொள்வதை புதிதாக இணைத்துள்ளன.
முகமது பின் ரஷீத் மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் (MBRU) மற்றும் DHA ஆகியவற்றின் கூட்டு ஆய்வின் பின்னர் குழந்தைகளில் உமிழ்நீர் அடிப்படையிலான சோதனையின் கண்டறியும் துல்லியத்தை எடுத்துரைத்த பின்னர் “ஆராய்ச்சி சார்ந்த மற்றும் ஆதார அடிப்படையிலான நடவடிக்கை”-ன் கீழ் இந்த சோதனை வருகிறது.
இந்த நடவடிக்கையானது குழந்தைகளுக்கு கொரோனா சோதனையின் மிகவும் எளிமையான முறையை உறுதி செய்யும் மற்றும் குழந்தைகளுக்கு ஸ்வாப் டெஸ்ட் மூலம் மேற்கொள்ளும் கொரோனா சோதனைக்கான சிரமத்தை நீக்கும் என்று DHA கூறியுள்ளது.
இதற்கான ஆய்வின் முடிவைப் பெற, கொரோனா ஸ்கிரீனிங்கிற்காகச் சென்ற 476 குழந்தைகளிடமிருந்து உமிழ்நீர் மற்றும் ஸ்வாப் டெஸ்டின் மூலம் பெறப்பட்ட மாதிரிகளை ஆராய்ச்சி குழு DHA மையங்களுக்கு எடுத்துச் சென்றது. கொரோனா வைரஸை ஏற்படுத்தும் SARS-CoV-2 என்ற வைரஸைக் கண்டறிய மாதிரிகள் பின்னர் சோதிக்கப்பட்டன.
அதில், 87.7 சதவீத உணர்திறன் மற்றும் 98.5 சதவீத விவரக்குறிப்புடன் வைரஸ் கண்டறிதலுக்கு உமிழ்நீர் பயன்படுத்தப்படலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உமிழ்நீர் சோதனைகளுக்கான நேர்மறை மற்றும் எதிர்மறை முன்கணிப்பு மதிப்புகள் முறையே 92.2 சதவீதம் மற்றும் 97.6 சதவீதம் ஆகும். இந்த முடிவுகள் குழந்தைகளில் கொரோனா வைரஸ் ஸ்க்ரீனிங்கிற்கு உமிழ்நீர் ஒரு பயனுள்ள கண்டறியும் மாதிரியாகும் என்பதைக் காட்டுகிறது என்று DHA தெளிவுபடுத்தியுள்ளது.
DHA இன் மருத்துவ ஆதரவு சேவைகள் மற்றும் நர்சிங் துறையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஃபரிதா அல் காஜா அவர்கள், இந்த முறை குழந்தைகளை ஸ்வாப் டெஸ்டினால் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனையின் சிரமத்தை நீக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த கூட்டு முயற்சி, மருத்துவ அடிப்படையிலான மிக உயர்ந்த தரங்களை வழங்க பொது சுகாதாரக் கொள்கைகளை உருவாக்க ஆராய்ச்சி அடிப்படையிலான தரவு எவ்வாறு உதவும் என்பதை எடுத்துக்காட்டுகிறது என்றும் கூறியுள்ளார்.
MBRU இன் மருத்துவக் கல்லூரியின் ஆய்வின் முதன்மை ஆய்வாளரும் குடும்ப மருத்துவத்தின் உதவி பேராசிரியருமான டாக்டர் ஹனன் அல் சுவைடி அவர்கள் கூறியதாவது: “இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் துபாயின் முயற்சிகள் ஆராய்ச்சி சார்ந்தவை மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இது அதிகளவு எண்ணிக்கையிலான சோதனையின் செலவு குறைந்த முறையாகும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளில் உமிழ்நீர் அடிப்படையிலான கொரோனா சோதனைக்காக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வானது, உலகின் மிகப்பெரிய ஆய்வாகும். இந்த ஆய்வு DHA-இல் மனித ஆராய்ச்சி நெறிமுறைகள் குழுவிலிருந்து ஒப்புதல் பெற்றது மற்றும் சக மதிப்பாய்வு வெளியீட்டிற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.