ஐக்கிய அரபு அமீரகக் குடியிருப்பாளர்கள் அனைவரும் ஈத் அல் அதா விடுமுறையை அனுபவித்து வரும் வேளையில், ஜூன் 7, சனிக்கிழமை அதிகாலை நாட்டின் பல பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, ஷார்ஜாவில் உள்ள கோர்ஃபக்கன் மற்றும் ஃபுஜைராவில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகியுள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) உறுதிப்படுத்தியுள்ளது, இது அதிகரித்து வரும் கோடை வெப்பத்திலிருந்து புத்துணர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
ஷார்ஜாவில் நஹ்வா, அல் ரஃபிசா டேம் மற்றும் வாடி ஷீஸ், ஃபுஜைராவில் அல் க்ரய்யா மற்றும் மிர்பிஹ் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் மழை பெய்ததாக NCM அறிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை பல்வேறு பகுதிகளில் காணப்பட்ட மழையைத் தொடர்ந்து, கடும் வெப்பத்திலிருந்து குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு இந்த மழை புத்துணர்ச்சியை அளித்துள்ளது.
நாட்டின் கிழக்குப் பகுதிகளில் வெப்பச்சலன மேகங்கள் இருப்பதால் NCM மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வானிலை எச்சரிக்கைகளை வெளியிட்டது. வெள்ள அபாய எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது, வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ள பள்ளத்தாக்குகள் மற்றும் தாழ்வான பகுதிகளைத் தவிர்க்குமாறு குடியிருப்பாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகள் மூலம் தகவல்களைப் பெறவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பல கடலோர மற்றும் உள் பகுதிகளில் இன்று இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை வரை ஈரப்பதம் அதிகரிக்கும், இது மூடுபனி உருவாக வழிவகுக்கும் என்று கூறப்படுகின்றது. இதனிடையே, காற்று லேசானது முதல் மிதமானது வரை இருக்கும் என்றும், அவ்வப்போது வலிமை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அரேபிய வளைகுடாவில் கடல் நிலைமைகள் லேசானதாக இருக்கும் என்றும், ஓமன் கடலில் லேசானது முதல் மிதமான அலை செயல்பாடு இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அபுதாபியில் அதிகபட்ச வெப்பநிலை 39°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28°C ஆகவும் இருக்கும், துபாயில் 38°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°C ஆகவும் இருக்கும். ஷார்ஜாவில் துபாயைப் போலவே அதிகபட்ச வெப்பநிலை 38°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°C ஆகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது..
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel