ஐக்கிய அரபு அமீரகத்தில் வரவிருக்கும் 49 வது தேசிய தினத்தை முன்னிட்டு பல்வேறு காரணங்களால் அமீரகத்தில் கைது செய்யப்பட்டு தற்பொழுது சிறையில் இருக்கும் 628 கைதிகளை விடுவிக்கப்படுவார்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் அறிவித்துள்ளார்.
இந்த முடிவானது கைதிகளுக்கு புதிதாக தங்களது இயல்பு வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதையும், அவர்களது குடும்பங்களின் துன்பத்தைத் தணிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், மன்னிக்கப்பட்ட கைதிகளின் கடன்கள் மற்றும் அபராதங்கள் போன்ற அனைத்து நிதிச் சுமைகளும் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற ஒரு நற்பண்பு நடவடிக்கையில், நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டு 49 கைதிகளை விடுவிக்க உச்சநீதிமன்ற உறுப்பினரும் அஜ்மானின் ஆட்சியாளருமான ஷேக் ஹுமாய்ட் பின் ரஷீத் அல் நுவைமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். மன்னிக்கப்பட்ட கைதிகள் அனைவரும் தங்கள் சிறையில் வசித்த காலங்களில் நன்னடத்தையோடு நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைதிகளின் விடுதலைக்கான நடைமுறைகள் உடனடியாக தொடங்கப்படும் என்றும் அஜ்மான் காவல்துறையின் தளபதி மேஜர் ஜெனரல் ஷேக் சுல்தான் அல் நுவைமி அவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.