கொரோனா தொற்றுநோய்க்கான தடுப்பூசிகள் (vaccines) குவைத் நாட்டிற்கு வந்தவுடன் குவைத் நாட்டின் குடிமக்களுக்கும், வெளிநாட்டினருக்கும் இந்த தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் எனினும் குவைத் நாட்டு குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தகவலறிந்த சுகாதார வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அல் கபாஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
குவைத் சமூகத்தின் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளுக்கு தடுப்பூசியை முதல் கட்டத்தில் வழங்க சுகாதார அமைச்சகம் செயல்பட்டு வருவதாகவும், இது தடுப்பூசி எப்போது வரும் என்பதைப் பொறுத்தது என்றும் சுகாதார வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளது. மேலும் கூறுகையில் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள், முதியவர்கள் மற்றும் முன்னணி ஊழியர்கள் முதலில் இந்த தடுப்பூசி பெறுவார்கள் எனவும் அது குறிப்பிட்டுள்ளது.
ஃபைசரிலிருந்து (Pfizer) 1 மில்லியன் தடுப்பூசிகளையும், மாடர்னாவிலிருந்து (Moderna) 1.7 மில்லியன் தடுப்பூசிகளையும், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா (Oxford-AstraZeneca) தடுப்பூசிகளின் மூன்று மில்லியன் டோஸ்களையும் இறக்குமதி செய்ய குவைத் அரசு ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளது.
இதன் மூலம் சுமார் 5.7 மில்லியன் டோஸுடன், சுமார் 2.8 மில்லியன் மக்களுக்கு ஒரு நபருக்கு இரண்டு டோஸ் என்ற அடிப்படையில் குவைத் அரசால் தடுப்பூசிகளை வழங்க முடியும். எனினும் குறிப்பாக 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசிகளை வழங்க பரிந்துரைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிவில் தகவலுக்கான பொது அதிகாரசபையின் தரவுகளின் அடிப்படையில், ஜனவரி 1, 2020 ஆம் தேதி நிலவரப்படி, குவைத்தின் மொத்த மக்கள் தொகை 3.5 மில்லியன் எனவும், அதில் 3.2 மில்லியன் பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் அவர்கள் அனைவரும் இந்த கொரோனா நோய்த்தொற்றுக்கண தடுப்பூசிக்கு தகுதி பெறுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.