ADVERTISEMENT

UAE: 750 மில்லியன் திர்ஹம்ஸ் திட்டத்தில் விரிவுபடுத்தப்படும் எமிரேட்ஸ் சாலை.!! செப்டம்பரில் பணிகள் தொடங்கும் என தகவல்.!!

Published: 14 Jul 2025, 7:22 PM |
Updated: 14 Jul 2025, 7:22 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகம், அமீரகத்தின் பிரதான சாலைகளில் ஒன்றான எமிரேட்ஸ் சாலையை மேம்படுத்துவதற்கான 750 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பிலான ஒரு பெரிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த பெரிய அளவிலான திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் தொடங்கப்படும் என்றும், மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் முழுமையாக நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, ஷார்ஜாவில் உள்ள அல் பதீ இன்டர்சேஞ்சில் இருந்து உம் அல் குவைன் வரையிலான எமிரேட்ஸ் சாலை 25 கிலோமீட்டர் நீளத்தில் ஒவ்வொரு திசையிலும், தற்போதைய மூன்று வழி பாதையிலிருந்து ஐந்து வழி பாதைகளாக விரிவுபடுத்தப்படும். இந்த மேம்படுத்தல் சாலையின் போக்குவரத்து திறனை 65 சதவீதம் அதிகரித்து, ஒரு மணி நேரத்திற்கு 9,000 வாகனங்களை அனுமதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாலங்கள் மற்றும் சேவை சாலைகள்

இந்த திட்டத்தில் சுமார் 12.6 கிலோமீட்டர் நீளமுள்ள ஆறு புதிய பாலங்களுடன், இன்டர்சேஞ்ச் எண் 7க்கான ஒரு பெரிய மேம்படுத்தல் திட்டமும் அடங்கும் என தெரியவந்துள்ளது. இந்த பாலங்கள் ஒரு மணி நேரத்திற்கு 13,200 வாகனங்களைக் கையாளும். கூடுதலாக, நெடுஞ்சாலையின் இருபுறமும் 3.4 கிலோமீட்டர் புதிய சர்வீஸ் சாலைகள் கட்டப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த சாலை மேம்பாடுகள் ராஸ் அல் கைமா, உம் அல் குவைன், ஷார்ஜா மற்றும் துபாய் இடையே பயணிக்கும் ஓட்டுநர்களின் பயண நேரத்தை 45% வரை குறைக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இது குறித்து எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் சுஹைல் முகமது அல் மஸ்ரூய் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், இந்த திட்டம் நெரிசலைக் குறைத்தல், சாலை பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் குடியிருப்பாளர்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்துதல் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய மேம்பாட்டு இலக்குகளை ஆதரிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் ஒருங்கிணைந்த மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள சாலை வலையமைப்பை நாடு முழுவதும் உருவாக்குவதற்கு இது ஒரு முக்கிய படியாகும் என்றும் அமைச்சர் சுஹைல் முகமது அல் மஸ்ரூய் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இந்த மேம்படுத்தப்பட்ட எமிரேட்ஸ் சாலை, போக்குவரத்து நெரிசல் மற்றும் கார்பன் உமிழ்வைக் குறைப்பது மட்டுமல்லாமல், வடக்கு எமிரேட்ஸ் மற்றும் துபாய் இடையேயான ஒட்டுமொத்த இணைப்பையும் மேம்படுத்தும் என்றும், இது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு நாடு முழுவதும் நிலையான வளர்ச்சியையும் ஆதரிக்கும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel