ADVERTISEMENT

உலகை அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா வைரஸ்..!! சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு மீண்டும் தடை விதித்த சவூதி அரேபியா..!!

Published: 21 Dec 2020, 10:59 AM |
Updated: 21 Dec 2020, 11:33 AM |
Posted By: admin

உலகம் முழுவதும் கொரோனா வைரசிற்கு எதிராக தடுப்பூசி சோதனை செய்யப்பட்டும், பயன்பாட்டுக்கும் வந்து கொண்டிருக்கும் நிலையில், இங்கிலாந்தில் வடிவ மாற்றம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. சுகாதார அதிகாரிகள் இந்த வகை கொரோனா வைரஸ் 70 சதவீதம் வேகமாகப் பரவுகிறது என்று உறுதிப்படுத்தியுள்ளனர். இதனால் பல ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியா உள்ளிட்ட மற்ற பல நாடுகளும் இங்கிலாந்து நாட்டிற்கு இடையேயான விமான சேவைகளுக்கு தற்பொழுது தடை விதித்துள்ளன.

ADVERTISEMENT

இந்த வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வளைகுடா நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவானது அனைத்து சர்வதேச விமான சேவைகளையும் ஒரு வாரம் இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது என்று சவூதி பத்திரிகை நிறுவனம் (SPA) தெரிவித்துள்ளது.

அத்துடன் சவூதி அரேபியா மற்ற நாடுகளுடனான தரை வழி மற்றும் கடல் வழி போக்குவரத்திற்கும் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குடிமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த முற்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் சர்வதேச விமானப் போக்குவரத்து தடையானது மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:

1. அவசரகால நிகழ்வுகளைத் தவிர்த்து, பயணிகளுக்கான அனைத்து சர்வதேச விமானங்களையும் ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இருப்பினும், தற்போது சவூதியில் இருக்கும் வெளிநாட்டு விமானங்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

2. தரை வழி மற்றும் துறைமுகங்கள் வழியாக நாட்டிற்குள் நுழைவதை தற்காலிகமாக ஒரு வார காலத்திற்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு மேலும் ஒரு வாரத்திற்கும் இத்தடையானது நீட்டிக்கப்படலாம்.

3. டிசம்பர் 8, 2020 க்குப் பிறகு ஐரோப்பிய நாடுகள் ஒன்றிலிருந்து அல்லது புதிய வகை கொரோனா வைரஸ் தோன்றிய எந்த நாட்டிலிருந்தும் திரும்பி வந்த அனைவரும் பின்வருவனவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்:

  • சவூதி வந்த நபர், சவூதிக்கு வந்த நாளிலிருந்து இரண்டு வார காலத்திற்கு சுய தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு ஐந்து நாட்களுக்குப் பிறகும் அவரது தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • கடந்த மூன்று மாதங்களில் ஒரு ஐரோப்பிய நாடு அல்லது புதிய வகை கொரோனா வைரஸ் தோன்றிய எந்தவொரு நாட்டிலிருந்தும் திரும்பி வந்த அல்லது அந்த நாடுகளின் வழியாக சவூதி வந்த எவரும், ஒரு கொரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

சுகாதார அமைச்சின் மதிப்பீட்டின் அடிப்படையில் தொற்றுநோய் தொடர்பான முன்னேற்றங்களின் படி இந்த நடவடிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அதனை பொறுத்து முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.