ADVERTISEMENT

Covid19: Pfizier இலவச தடுப்பூசி பிரச்சாரம் இன்று முதல் தொடக்கம்..!! முதற்கட்டமாக எமிரேட்ஸ் விமானத்தில் துபாயை வந்தடைந்த தடுப்பூசிகள்..!!

Published: 23 Dec 2020, 5:14 AM |
Updated: 23 Dec 2020, 5:19 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கு எதிராக சினோபார்ம் நிறுவனத்தின் தடுப்பூசியானது பயன்பாட்டுக்கு வந்ததை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான அமீரக குடியிருப்பாளர்கள் தடுப்பூசியினை பெற்று வருகின்றனர். இந்நிலையில், துபாயின் அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான உச்சக் குழு துபாயில் கொரோனாவிற்கு எதிராக ஒரு மிகப்பெரிய மற்றும் இலவச தடுப்பூசி பிரச்சாரத்தை இன்று (புதன்கிழமை) முதல் தொடங்கும் என்று நேற்று அறிவித்திருந்தது. இந்த தடுப்பூசி பிரச்சாரத்தில் ஃபைசர் (Pfizier) நிறுவனத்தை சேர்ந்த தடுப்பூசி பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

அதனை தொடர்ந்து, முதற்கட்டமாக ஃபைசர்-பயோஎன்டெக் (Pfizer-BioNTech) தடுப்பூசிகள் எமிரேட்ஸ் ஸ்கைகார்கோ விமானத்தில் பிரஸ்ஸல்ஸில் (Brussels, Belgium) இருந்து நேற்று வந்திறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஃபைசர் தடுப்பூசி பிரச்சாரத்தைத் தொடங்கிய நாடுகளில் ஒன்றாக தற்பொழுது ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்துகொள்கிறது.

ADVERTISEMENT

தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் சினோபார்ம் தடுப்பூசி 86 சதவிகிதம் பயனுள்ளதாக இருந்தாலும், அமீரக அதிகாரிகளின் கூற்றுப்படி, இரண்டு டோஸ் (dose) கொடுத்ததன் பின்னர் ஃபைசர் தடுப்பூசியின் சோதனை முடிவுகள் கொரோனாவிற்கெதிராக 95 சதவிகித செயல்திறன் மிக்கதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தியதன் பின்னர் இரண்டாவது டோஸ் 21 நாட்களுக்குப் பிறகு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சினோபார்ம் தடுப்பூசிகள் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் (35 முதல் 46 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலையில் குளிரூட்டப்பட வேண்டும், மேலும் மூன்று ஆண்டுகள் வரை நிலையானதாக இருக்கக்கூடும். ஆனால் ஃபைசர் தடுப்பூசி, மரபணு பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. இதனால் தொழில்துறை உறைவிப்பான் (industrial freezers) தேவைப்படுகிறது அத்துடன் -70 டிகிரி செல்சியஸ் (-94 டிகிரி பாரன்ஹீட்) குளிர் வெப்பநிலையில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சமீபத்திய அறிக்கையில், பயோஎன்டெக் தலைமை நிர்வாகி, இந்த தடுப்பூசி புதிய வகை கொரோனா வைரசிற்கு எதிராக செயல்படும் என்று தான் நம்புவதாகக் கூறியிருக்கிறார். இருப்பினும், அது குறித்த ஆய்வுகள் நடந்து முடிந்த பின்னரே உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.