கொரோனாவிற்கெதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடுமையாகப் பின்பற்றியதன் விளைவாக கிடைத்த வெற்றிகரமான முன்னேற்றத்தை தொடர்ந்து அபுதாபியில் அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் கொரோனா பரவல் காரணமாக சுற்றுலாவாசிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையினை நீக்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி, நாளை (டிசம்பர் 24) முதல் சுற்றுலாப் பயணிகளை அபுதாபி மீண்டும் வரவேற்கத் தயாராகியுள்ளது.
அதனை தொடர்ந்து, அபுதாபிக்கு வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் மற்றும் பயண நடைமுறைகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதனை பற்றிய முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சர்வதேச பயணிகள் அபுதாபிக்குள் நுழைய எதிர்மறையான PCR சோதனை முடிவு தேவையா?
அபுதாபிக்கு பயணிக்கும் சர்வதேச பயணிகள் புறப்படுவதற்கு 96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட செல்லுபடியாகும் கொரோனாவிற்கான நெகடிவ் PCR டெஸ்ட் ரிசல்ட் வைத்திருக்க வேண்டும். இருப்பினும் பயணிகள் இருக்கும் நாட்டை பொறுத்து, விமானம் புறப்படும் நேரத்திற்கு 48, 72 அல்லது 96 மணிநேரங்களுக்கு முன்னர் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். பயணிகள் தங்கள் நாட்டிற்கான பயணத் தேவைகளை முன்கூட்டியே சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அபுதாபிக்குள் நுழைந்தவுடன், அவர்களுக்கு இரண்டாவது முறையாக PCR சோதனை மேற்கொள்ளப்படும். அதன் முடிவு வெளியாகும் வரை அவர்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
அபுதாபிக்கு வந்தவுடன் சர்வதேச பயணிகள் தனிமைப்படுத்தப்பட வேண்டுமா?
“பச்சை” நிற பட்டியலில் இருக்கும் நாடுகளில் இருந்து அபுதாபிக்கு வரும் பயணிகள் அபுதாபிக்கு வந்ததும் மேற்கொள்ளப்படும் PCR சோதனையின் முடிவு வரும் வரையில் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். அதில் நெகடிவ் என ரிசல்ட் வந்த பின் அவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
மற்ற நாடுகளில் இருந்து அபுதாபிக்கு வரும் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். அவர்கள் தனிமைப்படுத்தலில் இருக்கும் பொழுது, ஒரு மின்னணு கைப்பட்டை (wristband) வழங்கப்படும், இதனை அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முழுவதும் அணிந்திருக்க வேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் அபுதாபியின் சுகாதார அதிகாரிகளால் தீர்மானிக்கப்படும். அது ஒரு ஹோட்டல், மருத்துவ அதிகாரிகள் வழங்கிய தங்குமிடம் அல்லது உங்கள் சொந்த வீடாக கூட இருக்கலாம்.
பச்சை பட்டியலில் இருக்கும் நாடுகள்
- ஆஸ்திரேலியா
- புரூனே
- சீனா
- கிரீஸ்
- கிரீன்லாந்து
- ஹாங் காங்
- மலேஷியா
- மொரீசியஸ்
- நியூசிலாந்து
- சவூதி அரேபியா
- சிங்கப்பூர்
- தைவான்
- தஜிகிஸ்தான்
- தாய்லாந்து
- உஸ்பேகிஸ்தான்
- வியட்நாம்
பயணிகள் 4 மற்றும் 8 ஆம் நாளில் PCR சோதனைகளை எடுக்க வேண்டுமா?
இல்லை, புதிய வழிகாட்டுதல்களின் படி, அனைத்து பயணிகளும் ஆறு நாட்கள் அல்லது அதற்கு மேல் தங்கினால் 6 ஆம் நாளில் PCR பரிசோதனையும், 12 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் தங்கினால் 12 ஆம் நாள் PCR பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும்.
கைப்பட்டையை எவ்வளவு காலம் அணிய வேண்டும்?
பயணிகள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட காலம் முழுவதும் கைப்பட்டையை அணிய வேண்டும். அபுதாபியில் வந்து 10 நாட்களுக்குப் பிறகு மருத்துவ அதிகாரிகளால் கைப்பட்டையானது அகற்றப்படும்.
PCR சோதனைகளில் இருந்து விலக்கு பெறுபவர்கள் யார்?
12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கடுமையான மற்றும் மிதமான குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் புறப்படுவதற்கு முன் மேற்கொள்ளப்படும் COVID-19 PCR பரிசோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.