ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினம் நெருங்கி வரும் நிலையில், துபாய் தேசிய தினத்திற்கு வழிவகுக்கும் ஒரு கண்கவர் காட்சிகள், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் அமீரகத்தின் உணர்வை பிரதிபலிக்கும் ஒரு மாத கால கொண்டாட்டத்துடன் மீண்டும் ஒருமுறை தேசத்தை பிரமிக்க வைக்க உள்ளது.
வருகின்ற நவம்பர் 3, திங்கள் கிழமை நடைபெறும் அமீரக கொடி நாள் (UAE Flag Day) முதல் டிசம்பர் 2, செவ்வாய்க்கிழமை வரும் ஈத் அல் எதிஹாத் வரை, ஐக்கிய அரபு அமீரகத்தின் குறிப்பிடத்தக்க பயணத்தை கௌரவிக்க துபாய் பிரம்மாண்டமான கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது.
கடந்த ஆண்டு நடத்திய #ZayedAndRashid என்ற கருப்பொருளை தொடர்ச்சியாக இந்த ஆண்டும் இரண்டாவது முறையாக துபாய் நடத்தவுள்ளது, இது நாட்டின் ஸ்தாபக தந்தைகளான ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் மற்றும் ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் ஆகியோரை கௌரவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.
பிராண்ட் துபாய் தலைமையிலான இந்த முயற்சியில், துபாய் அரசாங்க ஊடக அலுவலகத்தின் பிரிவான பிராண்ட் துபாய், அரசு, பகுதி-அரசு (semi government) மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து நகரம் முழுவதும் தேசிய, கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளின் துடிப்பான வரிசையை ஏற்பாடு செய்யும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பான சரியான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், கடந்த ஆண்டு விழாக்களில் ஒளி நிகழ்ச்சிகள், ‘UAE Flag Garden’ மற்றும் எமிராட்டி பாரம்பரியத்தைக் கொண்டாடும் இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன, இந்த ஆண்டு இன்னும் பெரிய கொண்டாட்டங்களை எதிர்பார்க்கலாம் என்று அறிக்கைகள் கூறுகின்றன.
இது குறித்து துபாயின் இரண்டாவது துணை ஆட்சியாளரும் துபாய் ஊடக கவுன்சிலின் தலைவருமான ஷேக் அகமது பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்: “பிராண்ட் துபாய் தலைமையிலான தேசிய மாதம், நமது தேசிய நிகழ்வுகளை ஒருங்கிணைந்த மற்றும் இணக்கமான முறையில் நினைவுகூருவதற்கான ஒரு கூட்டு முயற்சியாகும்.”
#ZayedAndRashid பிரச்சாரத்தின் தொடர்ச்சி, “உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட தொலைநோக்குப் பார்வை மற்றும் தாராள மனப்பான்மை கொண்ட இரண்டு குறிப்பிடத்தக்க தலைவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரக மக்களின் ஆழ்ந்த நன்றியை” பிரதிபலிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்..
அவரைத் தொடர்ந்து பேசிய துபாய் மீடியா கவுன்சிலின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான துபாய் அரசாங்க ஊடக அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலான மோனா கானெம் அல் மர்ரி, “இந்த பிரச்சாரம், சமூகம் தங்கள் தேசத்தின் மீதான அன்பையும் அதன் வளர்ச்சி மற்றும் வெற்றியில் அவர்களின் மகத்தான பெருமையையும் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு” என்று கூறியதுடன் கடந்த ஆண்டு பிரச்சாரம் இரண்டு பில்லியன் சமூக ஊடக ஈடுபாடுகளை உருவாக்கியது என்பதை எடுத்துரைத்தார்.
செய்தி அறிக்கைகளின் படி, இந்த ஆண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே முழு வீச்சில் உள்ளன, துபாய் ஃபிரேம், எக்ஸ்போ சிட்டியில் உள்ள அல் வாஸ்ல் டோம், DXB, துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால் மற்றும் சிட்டி வாக் உள்ளிட்ட துபாயின் மிகவும் புகழ்பெற்ற அடையாளங்களில் இந்த கொண்டாட்டம் இருக்கும் என கூறப்படுகின்றது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel